×

ஆவுடையார் கோயில்

ராஜகோபுர தரிசனம்!

திருப்பெருந்துறை, புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஆத்மநாதர் திருக்கோயில் சைவ சமயத்தின் மிக உயர்ந்த ஆன்மிகத் திருத்தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இத்தலம் ‘திருப்பெருந்துறை’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் ஆத்மநாதராகவும், இறைவி யோகாம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் மிகப்பெரிய தனிச்சிறப்பு இங்கு வழக்கமான சிவலிங்க வடிவம் இல்லாமல் ‘ஆவுடையார்’ எனப்படும் பீடத்தினை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இதனால் இத்தலம் ‘ஆவுடையார் கோயில்’ என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறது.

சிவபெருமான் உருவமற்ற பரம்பொருளாக வழிபடப்படுவதால் நந்தி, கொடிமரம், சண்டிகேஸ்வரர் சன்னதி போன்ற வழக்கமான அம்சங்கள் இங்கில்லை. இறைவன் எல்லா உருவங்களையும் கடந்தவன் என்ற ஆன்மிக உண்மையை இத்தலம் எடுத்துரைக்கிறது.இக்கோயில் தமிழர் சிற்பக்கலையின் உச்சநிலையை எடுத்துக்காட்டும் அரிய படைப்பாகும். ஒரே கல்லில் செதுக்கிய தூண்கள், கல் சங்கிலிகள், யாளி சிற்பங்கள், நடன வடிவங்கள், நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் ஆகியவை பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இத்தலம் முதலில் பாண்டியர்களால் உருவாக்கப்பட்டதாகவும் பிறகு சோழர் மற்றும் நாயக்கர் காலங்களில் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டிட அமைப்புகள் பெரும்பாலும் ஒன்பதாம் முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்ட வளர்ச்சிகளைச் சேர்ந்தவை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.கோயிலின் முன்வாசலில் அமைந்துள்ள இரு பிரமாண்டக் கல்தூண்கள் மற்றும் ஆயிரங்கால் மண்டப அமைப்பு இக்கோயிலின் சிற்பக்கலை மேன்மையை எடுத்துக்காட்டும் முக்கிய அம்சங்கள். தூண்களில் மிக நுணுக்கமான யாளிகள், நடன வடிவங்கள், வீரர்கள், தெய்வ உருவங்கள் மற்றும் அலங்கார வடிவங்கள் உயிரோட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த தூண்களின் மேற்பரப்பில் காணப்படும் நுணுக்கமான கோடுகள் மற்றும் வடிவங்கள் இன்றளவும் சிற்ப ஆய்வாளர்களை வியக்கச் செய்கின்றன.

ஆயிரங்கால் மண்டபத்தில் காணப்படும் ஒவ்வொரு தூணும் தனித்தனி கலை வடிவத்தைக் கொண்டுள்ளது. சில தூண்களில் இசை, நடனம், புராண நிகழ்வுகள் மற்றும் சைவ சமய அடையாளங்கள் செதுக்கப்பட்டுள்ளன.மண்டபத்தின் அமைப்பில் ஒளி மற்றும் காற்றோட்டம் இயற்கையாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளி தூண்கள் வழியாக விழும் தோற்றம் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இம்மண்டபம் ஆன்மிக மையமாக மட்டுமல்லாமல், தமிழர் கட்டிடக்கலை மற்றும் கல்சிற்ப நுணுக்கத்தின் அரிய சான்றாகவும் விளங்குகிறது.கோயிலின் கோபுரம் தமிழர் கட்டிடக்கலை நுணுக்கத்தையும் சைவ ஆன்மிக மரபையும் எடுத்துரைக்கும் சிறப்புமிக்க அமைப்பாகும்.

வெளிப்புறத் தோற்றத்தில் அமைதியும் ஆன்மிக ஆழமும் கலந்த தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்தக் கோபுரம், கோயிலின் தத்துவக் கருத்துக்களோடு ஒன்றிணைந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது.சோழர், பின்னர் நாயக்கர் கால கட்டிடக்கலை அம்சங்கள் கோபுர அமைப்பில் தெளிவாகக் காணப்படுகின்றன. பல அடுக்குகளாக உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வ உருவங்கள், யாளிகள், பூ வேலைப்பாடுகள், புராணக் காட்சிகள் மற்றும் அலங்கார வடிவங்கள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. கல் மற்றும் சுதை வேலைப்பாடுகள் இணைந்த அமைப்பு கோபுரத்திற்கு தனித்துவமான கம்பீரத் தோற்றத்தை அளிக்கிறது.

கோபுர அமைப்பிலும் அளவுக்கு மீறிய ஆடம்பரம் இல்லாமல் ஒரு சாந்தமான கலைநயம் காணப்படுகிறது. கோபுரத்தின் மேற்பகுதிகளில் காணப்படும் சிற்பங்கள் அந்தக் கால சமூக வாழ்க்கை, சமய மரபுகள் மற்றும் தமிழர் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக யாளி வடிவங்கள் மற்றும் தெய்வச் சிற்பங்களில் காணப்படும் முகபாவனைகள், உடை அலங்காரங்கள் மற்றும் உடல் அமைப்புகள் சிற்பிகளின் அபார திறமையை எடுத்துக்காட்டுகின்றன. இன்றும் இந்தக் கோபுரம், வரலாற்று ஆய்வாளர்கள், சிற்பக்கலை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பக்தர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது.

கோபுரத்தின் பல அடுக்குகளிலும் சிவபெருமான் தொடர்பான புராணக் காட்சிகள், சைவ சமய அடையாளங்கள், யாளிகள், கலைநயமிக்க பூ வேலைப்பாடுகள் மற்றும் நடன நிலைப்பாடுகளில் காணப்படும் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பத்திலும் உடை மடிப்புகள், ஆபரண வடிவங்கள், தலைமுடி அலங்காரங்கள் போன்ற நுண்ணிய அம்சங்கள் கூட மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.இந்தச் சிற்பங்களின் மிகப்பெரிய தனிச்சிறப்பு அவற்றின் உயிரோட்டமாகும். சில உருவங்கள் பேசப்போகும் போல் தோன்ற, சில சிற்பங்களில் உணர்ச்சிகளின் வெளிப்பாடு தெளிவாகக் காணப்படுகிறது. குறிப்பாக யாளி சிற்பங்களில் காணப்படும் தசை அமைப்புகள் மற்றும் முகபாவனைகள்.

கோபுரச் சிற்பங்களில் புராண நிகழ்வுகள் மட்டுமின்றி, அந்தக்கால சமூக வாழ்க்கை, இசை, நடனம் மற்றும் போர்க்கலை தொடர்பான வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. சூரிய ஒளி கோபுரத்தின் மீது விழும் நேரங்களில், சிற்பங்களின் நிழல் மற்றும் ஆழத் தோற்றம் மேலும் தெளிவாக வெளிப்படுகிறது. தூண்களில் காணப்படும் இந்தச் சிற்பங்கள் ஒளி விழும் கோணங்களில் வேறுபட்ட தோற்றங்களை வெளிப்படுத்துகின்றன. சில உருவங்கள் நகரும் போல் தோன்றும் அளவுக்கு ஆழமான செதுக்கல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் மிகப் புகழ்பெற்ற கலைச் சிறப்புகளில் ஒன்றாக ‘கொடுங்கை’ வேலைப்பாடுகள் கருதப்படுகின்றன. தமிழர் கல் சிற்பக்கலையின் உச்சநிலையை எடுத்துக்காட்டும் இந்தக் கொடுங்கைகள், கல்லில் செய்யப்பட்டிருந்தாலும் மர வேலைப்பாடுகளை போல மென்மையாகவும் இயல்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது அவற்றின் மிகப்பெரிய தனிச்சிறப்பாகும்.மண்டபங்களின் மேற்பகுதிகளில் அமைந்துள்ள இந்தக் கொடுங்கைகளில் பூ வடிவங்கள், வளைய அலங்காரங்கள், வளைந்த ஓர அமைப்புகள் மற்றும் சங்கிலி போன்ற நுணுக்கமான செதுக்கல்கள் காணப்படுகின்றன. மரத்தில் செய்யப்படும் ஓரக்கலை வேலைப்பாடுகளை போல, மிக மெல்லிய விளிம்புகளுடன் கல்லில் உருவாக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் கல்லால் செய்யப்பட்ட சங்கிலி வடிவங்களும் காணப்படுகின்றன. அவை தனித்தனியாக அசையும் தோற்றத்தை உருவாக்கும் அளவுக்கு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த சங்கிலிகளில் ஒவ்வொரு வளையமும் தனித்தனியாக இணைக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால், முழுச் சங்கிலியும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதாகும் என்பது அதன் மிகப்பெரிய சிறப்பு. கல்லை உடைக்காமல், உள்ளிருந்து வெட்டி இவ்வாறு சங்கிலி வடிவம் உருவாக்கியிருக்கிறார்கள். இயந்திர வசதிகள் இல்லாமலேயே இவ்வளவு நுணுக்கமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் தமிழர் சிந்தனையின் உயரத்தை உணர்த்துகிறது.ஆவுடையார் கோயிலை பார்க்கும்போது, தமிழர் வரலாறு என்பது வெறும் அரசர்களின் வரலாறு அல்ல, அது கல்லில் சிந்தனையை செதுக்கிய மக்களின் வரலாறு என்பதை உணர்த்துகிறது.

திலகவதி

 

Tags : Auvadiyar Temple ,Rajakopura ,Thirupperudura, Pudukkota ,Atmanathar Temple ,Thirupperudura ,
× RELATED கருணை தெய்வம் காமாட்சி அம்மன்