×

வைகாசி விசாகம் வழங்கும் வெற்றி வாழ்வு

வெற்றி தரும் விசாகம்

27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் அற்புதமான நட்சத்திரம். குருவின் நட்சத்திரங்களில் ஒன்று. `விசாகம்’ என்ற சொல்லுக்கு `மேலான கிளை’ அல்லது `பிரிந்து செல்லுதல்’ என்று பொருள் உண்டு. வானவியலில் இது ஒரு துலாக்கோல் (தராசு) போன்ற அமைப்பைக் கொண்டது. அதனால்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவாதிகளாகவும், எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை இந்திரன் மற்றும் அக்னி. இந்திரன் தலைமைப் பண்பையும் செல்வாக்கையும் குறிக்கிறார். அக்னி: தூய்மையையும் ஆற்றலையும் குறிக்கிறார். இந்த இருவரின் அம்சமும் பொருந்தி யிருப்பதால், விசாக நட்சத்திரம் `வெற்றி தரும் நட்சத்திரமாக’ கருதப்படுகிறது.

எல்லா தெய்வங்களுக்கும் உரியது

விசாக நட்சத்திரம் நான்கு நட்சத்திரங்களின் தொகுப்பாகும். இதனால்தான் அதிக ஒளியுடனும் சக்தியுடனும் திகழ்கிறது..அதைப்போல வைகாசி விசாகம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் உரியது எனச் சுருக்கிவிட முடியாது. சைவத்தில் முருகனுக்கும்,வைணவத்தில் நம்மாழ் வாருக்கும், பௌத்தத்தில் புத்தருக்கும் உரியதாக உள்ளது. மனிதாபி மானம், ஞானம் மற்றும் அகிம்சை ஆகிய மூன்றையும் இணைக்கும் பொதுவான சக்தியாகத் திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான பௌத்தர்களுக்கு இது மிக முக்கியமான நாள். புத்தர் பிறந்தது, அவருக்கு ஞானோதயம் கிடைத்தது, அவர் முக்தி (நிர்வாணம்) அடைந்தது என இம்மூன்றுமே வைகாசி பௌர்ணமி மற்றும் விசாக நட்சத்திரத் தில்தான் நிகழ்ந்தன. சமணத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர், தனது நீண்ட கால தவத்திற்குப் பிறகு `கேவல ஞானம்’ (முழுமையான அறிவு) பெற்ற தினமாகக் கருதப்படுவது வைகாசி மாதத்தின் வளர் பிறை காலத்தில்தான். “அறிவு மற்றும் ஞானம்’’ என்ற புள்ளியில் எல்லாச் சமயங்களும் இந்த விசாக நட்சத்திரத்தில் ஒன்றாக இணைகின்றன.

வைகாசி விசாகத்தின் வானியல்

சித்திரையில் உச்சம் பெற்ற சூரியன், வைகாசியில் தனது நண்பரான சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் நுழைகிறார். சூரியன் ஒரு ஜாதகத்தில் `ஆன்மா’ மற்றும் `தந்தை’யைக் குறிப்பவர். தந்தை (சிவன்) தனது ஆற்றலை வெளிப்படுத்தும் காலம் இது. ரிஷபத்திற்கு நேர் ஏழாம் வீடான விருச்சிகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போதுதான் பௌர்ணமி நிகழ்கிறது. சந்திரன் `மனம்’ மற்றும் `தாய்’ (சக்தி) ஆகியவற்றைக் குறிப்பவர். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுவார் என்றாலும், அதன் நேர் எதிர் வீடான விருச்சிகத்தில் அவர் அமர்ந்து சூரியனைப் பார்க்கும் போது, அங்கே “சிவசக்தி ஐக்கியம்’’ பரிபூரணமாக நிகழ்கிறது. விருச்சிகம் என்பது செவ்வாயின் (வீரம்/சக்தி) வீடு. அங்கே குருவின் நட்சத்திரமான விசாகத்தில் சந்திரன் நுழைகிறார்.இந்த நாள்தான் வைகாசி விசாகம்.

இந்த ஆண்டு வைகாசி விசாகம்

இந்த ஆண்டு வைகாசி விசாகம், வைகாசி மாதம் 16-ஆம் தேதி, (30.5.2026) சனிக்கிழமை சதுர்த்தசிக்குப் பின் பௌர்ணமி கூடிய நன்னாளில் வருகிறது. மதியம் 12:00 மணிக்கு மேல், விசாக நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணைந்து வருகின்ற அற்புதமான நாளாகத் திகழ்கிறது. இந்த வைகாசி பௌர்ணமியில் என்னென்ன சிறப்புக்கள் தெரியுமா?

1. இது முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான திருவிழா நாளாகும்.
2. பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவராகக் கருதப்படும் நம்மாழ்வார் அவதரித்தது இந்த வைகாசி மாதத்தில்தான் (வைகாசி – விசாகம்). வைணவத் தலங்களில் இது “நம்மாழ்வார் திருவவதார உற்சவமாக’’ கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
3. மிகவும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் வைகாசி மாதத்தில்தான் நடக்கும். குறிப்பாக வைகாசி (30.5.2026) `கருட சேவை’ உலகப் புகழ்பெற்றது.
4. மதுரை மீனாட்சி அம்மன் – சொக்கநாதர் திருக்கல்யாணம் சித்திரையில் நடந்தாலும், பல ஆலயங்களில் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவங்களும் திருக்கல்யாணங்களும் நடைபெறுவது வழக்கம்.

முருகப் பெருமானின் அவதார தினம்

வைகாசி மாதத்தின் சிறப்பு வைகாசி விசாகம். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகளாகத் தோன்றி, முருகப் பெருமான் அவதரித்த தினம் இதுவே. சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகத் தோன்றி, பின் அன்னை பார்வதியால் அணைக்கப்பட்டு `ஆறுமுகனாக’ உருப்பெற்ற நாள் வைகாசி விசாகம். தீமையை அழித்து நன்மையைக் காக்க இந்த நட்சத்திரத்தில்தான் ஞானக்குழந்தை அவதரித்தது. அறியாமை எனும் இருளை நீக்க, ஞானம் எனும் ஒளி பிறந்த தினமாகச் சைவம் இதைப் பார்க்கிறது. தர்மத்தை நிலைநாட்ட ஒரு தெய்வீக ஆற்றல் உருவான நாளாக போற்றப்படுகிறது. விருச்சிகம் என்பது செவ்வாயின் (வீரம்/சக்தி) வீடு. அங்கே குருவின் நட்சத்திரமான விசாகத்தில் சந்திரன் நுழைகிறார். சூரியன் (தந்தை) + சந்திரன் (தாய்) + குரு (ஞானம்) + செவ்வாய் (களத்தின் நாயகன்) – இந்த நான்கு சக்திகளும் இணையும் புள்ளியில்தான் முருகன் எனும் மகாசக்தி உருவாகிறது.

திருச்செந்தூர் வைகாசி விசாகம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் வைகாசி விசாகம் என்பது வருடத்தின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்று. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தத் தலத்தில், முருகப்பெருமான்“ஞானத்தின் வடிவாக’’ வீற்றிருப்பதால், விசாகத்தன்று இங்கு வழிபாடு செய்வது கோடி புண்ணியம் தரும். திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா வெறும் ஒரு நாள் நிகழ்வு அல்ல; இது 10 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவமாகும். 10 நாள் வசந்தோற்சவமாக மே 21 முதல் தொடங்கி மே 30 வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

பழனியில் தேரோட்டம்

முருகன் என்றாலே பழனி நினைவுக்கு வரும்.ஞான பண்டிதனாக கட்சி தரும் முருகனுக்கு இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் சந்நதியில் இப்பெருவிழா நடைபெறும்.மே 24 (ஞாயிறு): கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடக்கமாகிறது.. மே 24 – மே 29: வரை திருவிழாவின் 7-ஆம் நாளான மே 30, 2026 (சனி) அன்று மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி தங்கப் பல்லக்கு, தங்க மயில், ஆட்டுக்கடா, வெள்ளி மயில் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் சிகரமாக மே மாதம் 30 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். காலைதிருத்தேர் ஏற்றம் (சுவாமி தேரில் அமர்தல்) நடைபெறும்.மாலை (சுமார் 4:00 மணி) திருத்தேர் வடம் பிடித்தல் (தேரோட்டம் தொடக்கம்) ஆரம்பமாகும்.இரவு, பெரிய தந்தப் பல்லக்கில் தேர் கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags : Vaikasi Visakam ,Visaka ,
× RELATED கருணை தெய்வம் காமாட்சி அம்மன்