* நள்ளிரவில் 8 கார்கள், 5 ஆட்டோக்கள் உடைப்பு
* சட்டம்-ஒழுங்கு சீர்குலைவின் உச்சம் என மக்கள் குமுறல்
சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் நள்ளிரவில் கஞ்சா போதை கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர் 8வது பிளாக் 191வது தெருவில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் செயல்படுகிறது.
இந்த அலுவலகத்துக்கு எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் தங்களது கார்கள், ஆட்டோக்களை நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் மாநகராட்சி மைதானம் பகுதியில் பொருட்களை உடைப்பதுபோல் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அப்போது மைதானம் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகளை மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தது. இதனால் சிலர் சென்று தட்டி கேட்டபோது கடும் போதையில் இருந்த அந்த கும்பல், தட்டிக்கேட்ட பொதுமக்களை மிரட்டியுள்ளனர். இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அதன்பிறகு சில வாகனங்களை மர்ம கும்பல் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கொடுங்கையூர் எஸ்ஐக்கள் ஜோதிமணி, வெங்கடேசன் ஆகியோர் போலீசாருடன் சென்று 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட இருவரும் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 19வது தெருவை சேர்ந்த வீரமணி (28), ஜெயப்பிரகாஷ் (29) என தெரிந்தது. இவர்கள், தங்களின் நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து அந்த பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 கார்களின் கண்ணாடிகள், 4 ஆட்டோக்களின் கண்ணாடி, ஒரு லோடு ஆட்டோ கண்ணாடி என 13 வாகனங்களின் கண்ணாடிகளை நொறுக்கியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் தினமும் இந்த பகுதி மற்றும் வெளிப்பகுதியில் இருந்துவரும் இளைஞர்கள் கஞ்சா அடிப்பது, மது குடிப்பது என அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடத்திற்கு நேர் எதிரே தனியாருக்கு சொந்தமான பள்ளி உள்ளது. மதுவை குடித்துவிட்டு காலி பாட்டில்களை பள்ளி மீது தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும் கண்டுகொள்வதில்லை. நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் பலத்த சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தோம். வெளியே வந்து பார்த்தபோது வாகனங்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த பகுதியில் குடியிருக்கவே அச்சமாக உள்ளது. எனவே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு உரிய சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கவேண்டும். போலீஸ் பூத் அமைக்கவேண்டும்’’ என்றனர்.
இந்நிலையில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார் நேற்று காலை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5வது பிளாக்கை சேர்ந்த கோகுல் (29), ஜெகன் (29), பிரசாந்த் (30), என3 பேரை கைது செய்தனர்.
* தவெக அரசில் தொடரும் குற்றம்
தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன் கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். சமீப நாட்களாக சென்னை நகரில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
