- தோண்டமுத்தூர், கோயம்புத்தூர்
- சென்னை
- தொண்டாமுத்தூர்
- காளிகநாயக்கன்பாளையம்
- திவ்யா
- கோயம்புத்தூர்
- கார்த்திக்
- Mariyappan
தொண்டாமுத்தூர்: கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ளது கலிக்கநாயக்கன்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் திவ்யா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது இவரது தோழியின் அண்ணன் முறையான சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் (26) அறிமுகமானார்.
இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இன்ஸ்டாவில் பேசி பழகி வந்தனர். இதைதொடர்ந்து கடந்த 8 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். கார்த்திக் கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில்தான் கார்த்திக் மீது போக்சோ உள்ளிட்ட 31 வழக்குகள் தமிழகம் முழுவதும் இருந்தது திவ்யாவுக்கு தெரியவந்தது. உடனடியாக காதலை துண்டித்து கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்தினார்.
ஆனால் கார்த்திக் தொடர்ந்து போனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 3 பைக்குகளில் நண்பர்களுடன் டாஸ்டமாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர் காலி பீர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு மாலை 6.40 மணியளவில் திவ்யா வீட்டுக்கு சென்று பெட்ரோல் குண்டை வீசினர். போர்ட்டிகோவில் விழுந்து குண்டு வெடித்து அங்கிருந்து டூவீலர்கள், செருப்பு ஸ்டாண்ட் மீது பட்டு தீப்பிடித்தது.
இதனைத்தொடர்ந்து மற்றொரு பெட்ரோல் குண்டையும் அதே பகுதியில் வீசினர். அதுவும் வெடித்து சிதறி தீப்பிடித்தது. அப்போது வெளியே நின்ற திவ்யாவின் தந்தையை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். புகாரின்படி தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து குண்டு வீசிய காதலன் உள்பட 4 பேரை தேடுகின்றனர்
* கோட்டை விட்ட போலீஸ்
இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முன் விலை உயர்ந்த பைக்கில் நம்பர் பிளேட்டை மறைத்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வெகு இயல்பாக சிரித்தவாறு 4 பேரும் சுற்றியுள்ளனர். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதாக சந்தேகம் அடைந்த இந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் கோட்டைவிட்டு தற்போது தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
