×

மேகதாது வழக்கு; தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என 2025ம் ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை திட்ட விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு ஒன்றிய நீர்வள ஆணையம் அனுமதித்துள்ளது என்று கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி விசாரித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தொடர்பான விவரம் நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற இணையத்தில் வெளியானது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பில், ‘மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை திறந்த கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத்தின் கடந்த நவம்பர் 13 தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Megadad ,Supreme Court ,Tamil Nadu government ,Delhi ,Megadadu ,Government of Karnataka ,Megadhat Dam ,
× RELATED மேகதாது வழக்கு; தமிழ்நாடு அரசின்...