×

‘வெஜ் பிரியாணியில் சிக்கன் பீஸ்’உணவு டெலிவரி ஆப் நிர்வாகிகளுக்கு பிடிவாரண்ட்: நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு

 

திருமலை: வெஜ் பிரியாணியில் சிக்கன் துண்டு டெலிவரி செய்யப்பட்ட விவகாரத்தில் தனியார் உணவு டெலிவரி நிறுவன நிர்வாக இயக்குனர், ஓட்டல் மேலாளருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலம், கர்னூலை சேர்ந்தவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தனியார் உணவு டெலிவரி ஆப் மூலம் ஒரு ஓட்டலில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தார். வீட்டிற்கு டெலிவரி ஊழியர் வழங்கிய பிறகு, ஆசையுடன் சாப்பிட்டு கொண்டிருந்தவர், அதில் சிக்கன் துண்டுகள் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதில் இருதரப்பினரின் வாதங்களையும் விசாரித்த பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நுகர்வோர் ஆணையம், தனியார் உணவு டெலிவரி நிர்வாகம் மற்றும் பிற பிரதிவாதிகள் புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் மற்றும் நீதிமன்ற செலவிற்காக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் உணவு டெலிவரி ஆப் நிர்வாகம் ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தாததால், ஆணையம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நுகர்வோர் ஆணையத்தில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அவர்கள் பதிலளிக்க தவறியதை கடுமையாக கருத்தில் கொண்ட நுகர்வோர் ஆணையம், பெங்களூருவில் உள்ள உணவு டெலிவரி நிறுவன நிர்வாக இயக்குநர், நிறுவனத்தின் உதவி துணைத்தலைவர், குறைதீர்ப்பு அதிகாரி மற்றும் தனியார் ஓட்டலின் மேலாளர் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை வரும் ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags : Consumer Disputes Commission ,Tirumala ,Andhra Pradesh, Kurnool… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...