டெல்லி: எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் மற்றும் தவெக அரசை விமர்சித்து அவர் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தனர்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்த போலீசார், அவரை வாகனத்தின் மூலம் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திரண்டு முழக்கமிட்டனர். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், திருச்சி சிவா உள்பட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கைது செய்யாதே, கைது செய்யாதே என முழக்கமிட்டுத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
