சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மாவட்ட நீதிபதிகள் 9 பேர், வழக்கறிஞர்கள் 10 பேர் என மொத்தம் 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு கூடி எடுத்த இந்த அதிரடி முடிவு, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளை வேகப்படுத்தவும் நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்கவும் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த மே 18 அன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியுள்ளது. கடந்த 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளின் அடிப்படையில் இந்த இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நீதித்துறை அதிகாரிகள் பிரிவில் டாக்டர் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதண்டாயுதம் ஆகியோரையும் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது.
நடராஜன் ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தனை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், எல்லப்பன் மனோகரனை நீதிபதிகளாக்க பரிந்துரைத்துள்ளது. கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ராஜ்னிஷ் பாத்யில், அப்பாதுரை, ராமசாமி அனிதா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 19 பேரின் பட்டியலும் முறைப்படியான ஒப்புதலுக்காக ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
