- எங்களுக்கு
- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
- ஈரான்
- வாஷிங்டன்
- ஐக்கிய மாநிலங்கள்
- மத்திய கிழக்கு
- பெஞ்சமின் நேடன்யாகு
- டிரம்ப்
வாஷிங்டன்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் சூழலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்பும் நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் நாட்டுக்கு சமீபத்தில் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-விடம் (Benjamin Netanyahu) டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய சில மணிநேரங்களிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையின் போது ஈரானுடன் மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் டிரம்ப்பின் சமீபத்திய சீன பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்தைக்காக அமெரிக்கா விதித்த நிபந்தனைகளுக்கு ஈரான் தந்துள்ள பதில்களால் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.
தற்போது அமலில் இருக்கும் தற்காலிக போர் நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையில் உடையும் தருவாயில் இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப் தனது திருத்த ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் ஈரானுக்கான நேரம் மிக வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. அவர்கள் உடனடியாக செயல்பட வேண்டும், தவறினால் அவர்கள் இழப்பதற்கு ஏதும் மிஞ்சி இருக்காது காலம் பொன்னானது என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு ஒருமாதத்திற்கு மேலாகியும் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை. இந்நிலையில் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடர்வதற்காக அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளை ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் வெளிட்டுள்ளது. அதன்படி பேச்சு வார்த்தைகள் முடிந்தவுடன் ஈரான் தன்னிடம் 400 கிலோ கிராம் யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். ஈரான் தனது ஒரே ஒரு அணுசக்தி நிலையத்தை மட்டுமே செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் முடக்குவதற்கு பதிலாக அதன் திட்டத்தை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் நிபந்தனையை ஏற்க தயார் என டிரம்ப் அண்மையில் தனது நிலையில் சற்று இறங்கி வந்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களில் 25% விடுவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டதுடன் பெரும்பாலான சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும், அதை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு எந்தவொரு போர் இழப்பீடும் வராது என்றும் அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது.
இறுதியாக அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதும் அமெரிக்காவின் நிபந்தனையாக உள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு தன் தரப்பில் 5 முக்கிய நிபந்தனைகளை முன் வைத்துள்ளது. ஈரானிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) தங்களின் கோரிக்கைகள் பொறுப்பானவை என்று வாதித்துள்ளார்.
தஸ்னிம் (Tasnim) மற்றும் மெஹர் (Mehr) செய்தி நிறுவனங்களின்படி லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற இஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் உட்பட பிராந்திய முழுவதும் மேற்கொள்ளபட்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்த வேண்டும் என்று ஈரான் கூறியுள்ளது.
மேலும் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதார தடைகள் விலகிக் கொள்ளபட வேண்டும். ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ஈரானின் அனைத்து சொத்துக்களும் விடுவிக்கப்படவேண்டும். ஈரான் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படாது என்பதற்கான சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அதனுடன் போரினால் ஏற்பட்ட கட்டமைப்பும் மற்றும் பொருளாதார சேதங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சர்வதேச வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் முழுமையான இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இந்த இரு தரப்பு மோதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா படையினர் ஈரான் மீது கடுமையான வான்வெளி தாக்குதல்களை தொடங்கினர். அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் தற்போது வரை பெருமளவில் கடைபிடிக்கபட்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் கடல்வழி தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த முடக்கம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா கடற்படை முற்றுகையிட்டு தீவிர நெருக்கடியை கொடுத்துவருகிறது. இந்த போர் சூழல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தலில் குடியரசு கட்சி அதிபரான டிரம்ப்க்கு இது பலவீனமான புள்ளியாக மாறிவருவதால் போரை விரைந்து முடிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இருப்பினும் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட மறுப்பதால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்க உள்ளதாக axios செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு தரப்பும் தங்களின் நிபந்தனைகளில் சமரசமற்ற போக்கை கைப்பிடிப்பதால் மத்திய கிழக்கில் போர்மேகங்கள் மீண்டும் சூழ தொடங்கியுள்ளன.
