லண்டன்: பிரிட்டன் வரலாற்றில் இளம் வயது மேயர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பெற்றிருக்கிறார். இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லுரியில் படித்து வரும் 23 வயதான துஷார் குமார் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றிருக்கிறார்.
பிரிட்டனின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கவுன்சிலரான இவர், 2023 ஆம் ஆண்டில் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகர கவுன்சிலில் இணைந்தார். இந்த நிலையில், இவர் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகர மேயராகப் பொறுப்பேற்றுள்ளார். மேயராகப் பதவியேற்பதற்கு முன், அவர் துணை மேயராகப் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் போர்ஹாம்வுட்டில் சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
பிரிட்டன் உள்ளாட்சி வரலாற்றில் மிக இளம் வயது அதிலும் குறிப்பாக இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமை எனக்குக் கிடைத்திருப்பதை மகத்தான கௌரவமாகக் கருதுகிறேன். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நான் அரசியல் அறிவு படித்துக் கொண்டிருந்த போது, இவ்வளவு சீக்கிரம் ஒரு நகரத்தின் மேயராகப் பணியாற்றுவேன் என்று நினைக்கவில்லை. இந்த ஒட்டுமொத்த பயணமும் எனக்கு ஒரு அழகான கனவு போல இருக்கிறது. போர்ஹாம்வுட் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபடுவேன் என்று துஷார் குமார் கூறியுள்ளார்.
