×

இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்தும் பிரதமர் மோடியின் கருத்தை தமிழ்நாடு எதிர்க்க வேண்டும்: விசிக வலியுறுத்தல்

சென்னை : இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடியின் கருத்தைத் தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும் என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: பிரதமர் மோடி திடீரென இந்திய மக்களுக்கு சிக்கன நடவடிக்கைகளை பற்றிப் போதிக்கத் தொடங்கியுள்ளார். அவரது சமீபத்திய உரை பெரும்பாலும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) பிரச்னையை மையமாகக் கொண்டிருக்கிறது.

அவர் முன்வைத்த பரிந்துரைகளில், விவசாயம் தொடர்பான ஒன்று குறிப்பாக கவலையளிக்கிறது. விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றும், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க இது ஒரு சாத்தியமான தீர்வா? என்பதே உடனடியாக எழும் கேள்வி. இந்த பரிந்துரை இலங்கையின் அனுபவத்தை உடனடியாக நமக்கு நினைவூட்டுகிறது.

எனவே விவசாய விளைச்சலில் ஏற்படும் எந்தவொரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் . அதன் விளைவாக, பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களையே சார்ந்திருக்கும் நிலை அதிகரிக்கும்; இது உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தும்.

மேலும், தமிழ்நாட்டின் ‘மொத்த மாநில மதிப்பு கூட்டலில்’ (GSVA) ​​வேளாண்மைத் துறை தொடர்ந்து கணிசமான பங்களிப்பைச் செய்து வருகிறது. பயிர் விளைச்சலில் ஏற்படும் எத்தகைய வீழ்ச்சியும், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.

எனவே, ‘நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சரி செய்வதற்கான ஒரு கருவியாக’ இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்தைத் தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும். தமிழ்நாட்டு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பு, கிராமப் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார நலன்களைப் பாதுகாத்திட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவான, சமரசமற்ற ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Tamil Nadu ,Modi ,VCI ,Chennai ,VCI General Secretary ,Ravikumar ,Tamil Nadu government ,Modi… ,
× RELATED ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம்: அன்புமணி வலியுறுத்தல்