×

மூடுவதாக கூறப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பெட்டி, பெட்டியாக வந்த மதுபாட்டில்கள்: விழுப்புரத்தில் பொதுமக்கள் பேரதிர்ச்சி

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக அரசு மூடுவதாக அரசாணை வெளியிட்ட டாஸ்மாக் கடைக்கு லாரியில் மது பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக நேற்று கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 கடைகள் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பட்டியலில் வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் புகார் கூறிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடவில்லை என்ற அதிருப்தியும் எழுந்தது. இதுபோல், விழுப்புரம் நகரில் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும், அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த கடை மூடப்படுவதாக அரசாணை வெளியிட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பு வந்த மறுநாளே கடைகளில் மது வாங்குவதற்காக குடிமகன்களும் படையெடுத்தனர். கடையில் உள்ள சரக்கு தீரும் வரை கடை செயல்படும், அதன் பிறகு தான் மூடப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடையில் உள்ள சரக்கு அனைத்தும் காலியான நிலையில் நேற்று லாரியில் பெட்டி, பெட்டியாக பீர், பிராந்தி உள்ளிட்ட மது பாட்டில்கள் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடையில் சரக்கு தீர்ந்ததும் சீல் வைப்பார்கள் என்று கூறிய நிலையில் மீண்டும் லாரியில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில் வந்து இறங்குவது உண்மையிலேயே தமிழக அரசு கூறியபடி இந்த டாஸ்மாக் கடை மூடப்படுமா? அல்லது கண்துடைப்பா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : TASMAC ,Villupuram ,Tamil Nadu government ,Thaweka government ,Tamil Nadu ,
× RELATED மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு