×

டெல்டா மாவட்டங்களில் கனமழை: மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. திருச்சியில் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் மழை கொட்டியது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தது. நாகையில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை சாரல் மழை பெய்தது. மயிலாடுதுறையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. குடந்தையில் மாலை முதல் இரவு 8 மணிக்கு வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சையில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை விட்டு விட்டு மழை பெய்தது. மாலை இடைவிடாத பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் சென்றனர். கரூர் மாவட்டம் கடவூர் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 3 மணி அளவில் திடீரென மேக மூட்டம் ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குளித்தலையில் நேற்று மதியம் திடீரென காற்றுடன் மழை பெய்தது. கனமழையால் குளித்தலை பெரிய பாலம் அருகே சாலையோரம் இருந்த மரம் மின்கம்பங்கள் சாய்ந்தது. இதில் அப்பகுதியிலிருந்த மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. தொடர்ந்து பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், பாளையம், செஞ்சேரி, ஆலம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று பலத்த கோடை மழை பெய்து பூமியை குளிர்வித்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இந்த மழையால் நீர் நிலைகளில் நீர் இருப்பு சற்று அதிகமானது.

திருச்சியில் 2வது நாளாக நேறு மழை பெய்தது. மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மலைக்கோட்டை பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மழைநீர் புகுந்தது. தொட்டியம், தா.பேட்டை, துறையூர், முசிறி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. முசிறியில் மழையால் திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் திருஈங்கோய்மலை அருகே சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இந்த மழை குறுவை சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Delta ,Trichy ,Bay of Bengal ,Tamil Nadu.… ,
× RELATED சென்னை, தருமபுரி உள்ளிட்ட 20...