திருப்பூர்: திருப்பூரில் பட்டப்பகலில் கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற மாணவரிடம் ரூ.35 ஆயிரம் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மோகன். இவர் திருப்பூர் குமாரனந்தபுரத்தில் தங்கி பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சூர்யா (17), பிளஸ்-2 முடித்துள்ளார். இவர், தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பதற்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், மோகன் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய சேர்க்கை கட்டணம் ரூ.35 ஆயிரத்தை மகன் சூர்யாவிடம் கொடுத்து கல்லூரியில் கட்டி வரும்படி கூறியுள்ளார். சூர்யா பணத்தை வாங்கிக்கொண்டு தனது நண்பர் சஞ்சையுடன் பைக்கில் கல்லூரிக்கு சென்றார். பைக்கை சூர்யா ஓட்டினார். சஞ்சய் பணப்பையுடன் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது, தாராபுரம் சாலை கே.ஜி. நகர் பகுதியில் சென்றபோது அவர்களுக்கு பின்னால் பைக்கில் வந்த 2 பேர் வந்தனர். அதில், பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் சஞ்சய் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மாணவரிடம் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
