எண்ணூர்: சென்னை திருவொற்றியூர், எண்ணூர் மார்க்கெட் பகுதிகளில் ஏராளமான கடைகள் உள்ளது. இங்கு சாலையோரம் கடை நடத்திவரும் பெண்கள் மற்றும் மூதாட்டிகளை குறிவைத்து ஒரு கும்பல் பொருட்கள் வாங்குவதுபோல் 500 ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதாக பேசப்பட்டுவந்தது.
இந்தநிலையில், எண்ணூர் தாழங்குப்பம் பஜார் பகுதியில் சாலையோரம் பழ வியாபாரம் செய்து வரும் குமாரி என்பவரிடம் நேற்று காலை 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து பழங்களை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையும் பெற்றுச்சென்றுள்ளனர். இதன்பிறகு குமாரி அந்த நோட்டை சக வியாபாரியிடம் கொடுத்து ஆய்வு செய்தபோது கள்ள நோட்டு என்று தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எண்ணூர் போலீசார் சென்று குமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த கள்ள நோட்டை வாங்கி பரிசோதனை செய்து அந்த நோட்டை யார் கொடுத்திருப்பார்கள் என்பது குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் மார்க்கெட்டில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டியிடம் போலி 500 ரூபாய் நோட்டு கொடுத்து பழங்கள் வாங்கி சென்றுள்ளனர்.
‘’திருவொற்றியூர், மணலி பகுதிகளில் 500 ரூபாய் போலிநோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வுசெய்து கள்ள நோட்டை புழக்கத்தை விடுபவர்கள் யார்? என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
