ராமேஸ்வரம்: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 4ம் தேதி தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‘‘மீனவர்கள் பிரச்னை குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. மீனவர்களின் பாதிப்பை உண்மையாக, உணர்வாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நம்ம மீனவர்கள் மீது அவர்கள் கையே வைக்கவிடக் கூடாது. அவர்களுக்கான பாதுகாப்பு பக்காவாக இருக்கணும். அதுதான் நமது ஒரே அஜெண்டா. மீனவர்களே, அடுத்தது நமது ஆட்சி தான். கவலைப்படாதீர்கள். உங்களுக்கான பாதுகாப்பு பக்காவாக இருக்கும்’’ என ஆவேசமாக பேசினார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 6 பேரையும், ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் விஜய், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராமேஸ்வரம் ஞானசீலன் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ் கூறுகையில், ‘‘தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்றப் பிறகு மீனவர்கள் பிரச்னை உணர்வுப்பூர்வமாக பார்க்கப்படும். ஒரு புதிய மாற்றம் உருவாகும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் பிரசாரத்தில் பேசியதற்கு மாறாக, விஜய் கடிதம் எழுதியது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அப்படியென்றால் பிரசாரத்தில் பேசியது எல்லாம் வெறும் கவர்ச்சிக்காக பேசியதா? மீனவர் நலன் காக்க சிறப்பாக செயல்படுவேன் என உறுதியளித்த முதல்வர் விஜய், தற்போது மீனவர்கள் கைதுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? முதல்வர் விஜய் சினிமாவில் பேசுவதுபோல், பிரமாண்டமான வசனங்கள் பேசிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு சொல் ஒன்று செயல் ஒன்றாக செயல்படுவது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மீனவர்கள் பிரச்னைக்கு முதல்வர் விஜய் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா இயக்குனர்களால் இயக்கப்படும் நடிகர் விஜய் போன்று இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வராக மீனவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

