சென்னை: கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்து போதையில் இரும்பு ராடால் பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உயிருக்கு பயந்து ஓடி வந்து புகார் அளிக்க வந்த போது, காலையில் வாங்க என்று டி.பி.சத்திரம் போலீசார் கேட்டை பூட்டிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் ராணி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (47). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் சஞ்சய் (23), தனுஷ் (20) ஆகியோருக்கு இடையே வாகனம் நிறுத்துவதில் கடந்த ஒரு மாதமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் கஞ்சா விற்பனை தொடர்பாகவும் ரமேஷ்குமார் தரப்பு சஞ்சய் மற்றும் தனுஷ் ஆகியோர் மீது அடிக்கடி காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு ரமேஷ்குமார் தனது வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய் மற்றும் தனுஷ் தரப்பினர் தங்கள் மீது கஞ்சா விற்பனை செய்வதாக புகார் கூறுவியா என கூறி ரமேஷ்குமார் மற்றும் அவரது தங்கை கலைச்செல்வி மற்றும் உறவினர் ஐயப்பன் ஆகியோரை கத்தி மற்றும் இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உயிருக்கு பயந்து ரமேஷ்குமார் மற்றும் அவரது தங்கை கலைச்செல்வி, ஐயப்பன் ஆகியோர் ரத்த காயங்களுடன் டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க ஓடி வந்துள்ளனர்.
அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார், எந்த புகாராக இருந்தாலும் காலையில் வாங்க என்று கூறி காவல் நிலைய கேட்டை பூட்டியதாக கூறப்படுகிறது. அதேநேரம் புகார் அளிக்க வந்த கலைச்செல்வியை தரக்குறைவாக நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வேறு வழியின்றி ரத்த காயங்களுடன் 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
அதேநேரம், தாக்குதல் நடத்திய சஞ்சய் மற்றும் தனுஷ் தரப்பினரும் ரமேஷ்குமார் தரப்பினர் மீது புகார் அளித்தனர். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்தனர். அதேநேரம் பிரச்னை பெரிய அளவில் உருவானதை தொடர்ந்து போலீசார் வேறு வழியின்றி புகாரை எடுத்தனர். அதைதொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக சஞ்சய், தனுஷ், ஆர்யா ஆகியோரை டி.பி.சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
* போலீசார் எங்களை காப்பாற்றவில்லை உயிர் தப்பிய பெண் கண்ணீர்
புகார் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கலைச்செல்வி கூறுகையில், ‘‘கஞ்சா போதையில் எங்களை தாக்குகின்றனர். அப்போது உயிர் பயத்தில் ரத்தத்துடன் டி.பி.சத்திரம் காவல் நியைத்திற்கு ஓடி வந்தும் எங்களை போலீசார் காப்பாற்றவில்லை. நீங்கள் இப்போது, போங்க காலையில் வாங்க என்று சொல்லி கேட்டை பூட்டுராங்க. எங்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம்.
இதற்காகவா நாங்கள் விஜய் அண்ணனுக்கு ஓட்டு போட்டோம். கஞ்சாவுக்கு ஒரு முடிவு வரும் என்று தானே ஓட்டு போட்டோம். எங்களை தாக்கிய நபர்கள் சிறு வயதில் இருந்தே கஞ்சா அடிக்கும் பழக்கம் உடையவர்கள். நாங்கள் 40 ஆண்டுகளாக இருக்கிறோம். இது வரை இதுபோல் நடந்தது கிடையாது.
எப்போவும் அந்த பசங்க கஞ்சா அடித்து கொண்டு தான் இருப்பாங்க. எங்கள் அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டாங்க. நாங்கள் எப்ப புகார் அளித்தாலும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவிடுவார்கள். எங்கள் குடும்பத்திற்கு நடந்தது போல் எந்த குடும்பத்திற்கு நடக்க கூடாது’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

