×

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? ஒன்றிய அரசுடன் டெல்லியில் இன்று ஆலோசனை

 

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியை நியமனம் செய்வது ஒன்றிய உள்துறை அதிகாரிகளுடன் தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. அதன்பின்னர் புதிய டிஜிபியை தமிழக அரசு நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் தமிழக அரசு, 10 பேர் கொண்ட டிஜிபிக்களின் பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. அதில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோரது பெயர்களை ஒன்றிய அரசு, அனுப்பி வைத்தது. ஆனால் இந்தப் பட்டியலை தமிழக அரசு ஏற்கவில்லை. அதில் சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோருக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் அவர்களது பெயரை மாற்றி விட்டு புதிய பட்டியலை அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒன்றிய அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த தேதி குறித்தது. ஆனால் ஒன்றிய அரசு அதிகாரிகள் அந்தக் கூட்டத்துக்கு வராததால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக அரசிடம் இருந்து தற்போது 3 பேரின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரது பெயர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் சந்தீப் ராய் ரத்தோருக்கும், வன்னியப்பெருமாளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால் அதில் வன்னியப்பெருமாளின் சான்றிதழுக்கு தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பிக்கவில்லை. சந்தீப் ராய் ரத்தோருக்கு சான்றிதழ் அளித்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் டெல்லியில் இன்று ஒன்றிய உள்துறைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் மணிவாசன் ஆகியேர் டெல்லி சென்றுள்ளனர். இன்று அந்த 3 அதிகாரிகளின் பட்டியலுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக அரசு நிரந்தர டிஜிபியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கும். அதில் சந்தீப் ராய் ரத்தோர் அல்லது மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரில் ஒருவருக்கு டிஜிபி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : DGP ,Tamil Nadu ,Union Government ,Delhi ,Chennai ,Tamil Nadu government ,Union Home Affairs ,Shankar Jiwal ,DGP of Tamil Nadu ,
× RELATED கோவையில் சிறுமி படுகொலை:...