×

நாளை என்பது இல்லை நரசிம்மரிடத்தில்….

சிங்கிரிக்குடி

பிரகலாதன் வேண்டுகோளுக்கிணங்கி, 16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது. இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.

பரிக்கல்

இத்தலமும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான். யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான்.

அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

பூவரசங்குப்பம்

இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது. தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி. பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

அந்திலி

நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார். எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார்.

இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனின் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார். திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத்திருக்கிறது அந்திலி திருத்தலம்.

Tags : Narasimmaridad ,Singirikudi Pragalatan ,Pragalatan ,Rajaraja Chozhan ,Vijayanagara ,Raja Tower ,Narasimmar ,Narasimbuwa ,
× RELATED சிக்கெனப் பற்ற, பட்டென விட வேண்டும்!