தமிழ் கடவுள் முருகப்பெருமான் குன்றிருக்கும் இடமெல்லாம் குடிகொண் டிருப்பதனால் மலையேறி சென்றால் தான் அவனை தரிசிக்க முடியும்…! ஒவ்வொரு மலைக்கிராமங்களில் மலை உச்சியில் அல்லது மலைக்கு போகும் வழியில் முருகன் திருக்கோயில்களை அமைந்திருக்கும், பார்த்திருப்போம், போயிருப்போம்…! திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை தொடர்ச்சிப் பகுதியில் “அருள்மிகு மலைக்கிணர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறுபது தமிழ் மாதங்க ளை அடிப்படையாக கொண்டு அறுபது படிகள் இறங்கி தரிசிக்கும் வகையில் மலைப் பள்ளத்தாக்கு போன்ற அமைப்பில் அமையப் பெற்றுருக்கிறது…!பிற்கால பாண்டிய மன்னர்களால் எழுப்பப்பட்டிருக்கிற இத்திருக்கோயில் திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் “கீழ்பழனி” என பாடல் பெற்ற திருத்தலமாகும்…!
கனவில் முருகப்பெருமான்
பிற்கால பாண்டிய மன்னர்கள் (12 -13 ஆம் நூற்றாண்டு) ஆட்சியில் ஒரு சமயம் பாண்டிய மன்னன் இந்த அடர்ந்த வனப் பகுதியில் வேட்டையாட வந்திருக்கிறார். அங்கிருந்த சுனையில் தண்ணீர் குடித்து விட்டு களைப்பில் மன்னன் சற்று நேரம் அயர்ந்து தூங்கி விடுகிறார் “கனவில் முருகப்பெருமான் தோன்றி தீர்த்தம் அருகிலேயே கோயில் எழுப்புமாறு ஆணை கிடைக் கிறது.” அதன் படியே வேலுடன் கூடிய முருகன் சிலை வைத்து மன்னன் இத்திருக்கோயி லை எழுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.
பாண்டிய மன்னர்களின் அடையாளமான இரட்டை மீன் சின்னமும், மயில் சின்னமும் இக்கோயில் அர்த்த மண்டபத்தின் வெளிப்புற கருங்கல் சுவற்றில் பொறிக்கப்பட்டிருக்கிறது, இதன் மூலம் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் என உறுதிபடுத்துகிறது. இருப்பினும் பின்னால் வந்த அரசர் களால் ஏன் கவனிக்கப்படவில்லை? பராமரிப்பும் இல்லாமல் கோயில் சிதிலமடைந்திருக்கிறது, மூலவர் முருகன் சிலையும் பூமிக்குள் புதைந்து விட்டது? பலநூற்றாண்டுகள் கடக்கின்றன.
முருக பக்தரான திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1978ல் இக்கோயில் புரனமைப்பு மற்றும் திருப்பணிகள் வேலைகளில் ஆன்மிக சான்றோர்கள், ஊர் மக்கள் உதவியுடன் முயற்சி எடுத்ததன் காரணமாக இக்கோயில் புதுப்பொலிவு பெற்றதாக சொல்லப்படுகிறது. அதாவது தற்போதுள்ள கோயில் பழைய கோயில் மேல் கட்டப்பட்டது அதேபோல பழைய ஆதிமுருகனின் சிலையை எடுத்து மீண்டும் புதிய கோயிலில் பிரதிஷ்டை செய்யலாம் என வாரியார் சுவாமிகள் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டாலும் அச்சிலையை எவ்வளவு முயற்சித்தும் அசைக் கக்கூட முடியவில்லை, மண்ணிலிருந்து எடுக்க முடியவில்லையாம்…!ஆகவே பழைய மூலவர் சிலைக்கு 12 அடி உயரத்திற்கு மேலே புதிதாக திருக்கோயில் கட்டப்பட்டும், முருகன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டும் திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தலைமையில் 1981 ஆம் ஆ ண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றுருக்கிறது.
முருகப்பெருமானுக்கு இன்றும் நடைபெறும் அபிஷேகங்கள் இதே கருவறைக்கு கீழே பழைய கோயில் மூலவர் சிலைக்கும் விழும்படி சந்நதியில் துவாரங்கள்
அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் பிரதான மகாமண்டபம், அர்த்த மண்டபம், அடுத்து கருவறையில் சுப்பிரமணியர் வலது கையில் தண்டமும், இடதுகையை இடுப்பில் வைத்தவாறு
நிற்கிறார்.
சுப்பிரமணியர் எந்நாளும், எப்பொழுதும் ராஜலங்காரத்தில் நின்ற கோலத்தில் காட்சி (தருகிறார்) தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்…!அதற்கு முன்மண்டபத்தில் உள்ள முருகப்பெருமான் உற்சவராக பாலகனாய் வீற்றிருக்கிறான், இந்த உற்சவர்க்குத்தான் பதினாறு வகை அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.திருப்புகழ், தேவாரம் பாடியும், பண்ணிசை முழங்க உற்சவரை மயில் வாகனத்திலும், மற்றும் ஆட்டுகிடா வாகனத்திலும் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் கோயில் திருச்சுற்று பிரகாரங்களில் (சுற்றி வருதல்) எழுந்தருளுகிறான்.
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தலவிருட்சம் நாவல் மரமாகும், தமிழ் கடவுளான முருகன் தமிழ் மாதங்கள் அறுபதை ஞாபகப்படுத்தும் விதமாக அறுபது படிகள் இறங்கியதும் பலிபீடம் மற்றும் முதலில் கொடிமரம் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் கருவறைக்கு இடது புறம் தேவியர்களான வள்ளித்தீர்த்தம், வலது புறம் தெய்வானை தீர்த்தம் என இரண்டு தலதீர்த்தங்கள் உள்ளன, பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. இரண்டு அடுக்கு போன்ற வெளிப்பிரகாரத்தில் சுற்றி வரும் போது ஆதிவிநாயகர் சந்நதி, நவகிரக சந்நதி உள்ளது சற்று தூரத்தில் மாமரத்தின் கீழே அருணகிரிநாதர் வீற்றிருக்கிறார்.
இக்கோயில் சிறப்புகள்
* தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம், சித்திரை விசாகம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
* ஐப்பசி மாதம் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதல், முருகப்பெருமான் சிவபூஜை திருக்காட்சி, மற்றும் சிவ உபதேச காட்சி, அருணகிரியார்க்கு நடனக்காட்சி அருளுதல், வேல் வாங்கும் காட்சி, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்பட ஏழுநாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
*இத்தலத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மலையகழகன் முருகப் பெருமானுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையில் பால் அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், பதவி உயர்வு, தொழில் அபிவிருத்தி ஏற்படும்.
* முக்கியமாக திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்…!
* திருவிழாக்கள், பண்டிகை நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாத சஷ்டி, பெளணர்மி, அமாவாசை, காத்திகை, கிருத்திகை அன்றைய நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* 1907 ஆண்டில் “ஸ்ரீ லஸ்ரீ காமாட்சி மௌனகுரு சுவாமிகள்” இத்திருத்தலத்திற்கு முருகனை வழிபட வந்திருக்கிறார், அப்போது முருகப்பெருமான் சுவாமிகளுக்கு காட்சி தந்து அருள் புரிந்திருக்கிறார்.
* ஸ்ரீலஸ்ரீ காமாட்சி மௌனகுரு சுவாமிகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பூராடம் நட்சத்திரம் அன்று குருபூசை நடைபெறும், சுவாமிகளுக்கு தனிமடாலயம்
மற்றும் தனிசந்நதியும் உள்ளது.
* தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்குகிற வண்டிக்காளிய ம்மன் திருக்கோயில் சார்ந்த உபகோயிலாகும்.
* தினமும் காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மீண்டும் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
எங்கு உள்ளது?
* திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 22 கி/மீ தூரத்தில் இக்கோயில் உள்ளது, 2 மற்றும் 3 ஆம் வழித்தட நகரப்பேருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இயங்குகிறது.
* செந்துறை, செங்குறிச்சி செல்லும் பேருந்துகள் திருமலைக்கேணி இக்கோயில் நிறுத்தத்தில் நின்று செல்லுகிறது.
* திருமலைக்கேணி சுப்பிரமணியரைக்காண படியிறங்கி வாருங்கள், மனக் குறைகளை பனிப்போல நீக்கிடுவான்.
ஆர்.கணேசன்
