திருச்சி: திருவானைக்காவல் கீழ்கொண்டயம் பேட்டை அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற திருவரங்கம் போலீசார் அதனை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞர் காணாமல் போனது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் அளித்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வினோத்குமாரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் கண்டெடுத்த எலும்புக்கூட்டை வைத்து ஆய்வு நடத்தி இறந்த நபர் வினோத்குமார் தான் என்று உறுதிபடுத்தினர். பின்னர், வினோத்குமார் இறந்தது எப்படி அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது உயிரை மாய்த்து கொண்டாரா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவரை யாரோ பெட்ரோல் ஊற்றி கொலை செய்த்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து வினோத்குமார் காணாமல் போன நாளில் எங்கு இருந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினார். மாற்றுத்திறனாளியான வினோத்குமார் பெற்றோரை இழந்து ஜம்புகேஸ்வரர் கோயிலில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் அதே பகுதி சேர்ந்த சிலர் குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்தனர். வினோத்குமார் தர மறுத்ததால் அவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்து விட்டு குழி தோண்டி புதைத்தனர்.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீராம், ராஜ்குமார், ஸ்ரீதர் மற்றும் 3 சிறுவர்கள் என 6 பேர் வினோத்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. தற்போது 5 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஒரு சிறுவனை தேடி வருகின்றனர்.
