×

அத்திப்பட்டு அருகே இன்று காலை மின்சார ரயில் மோதி வாலிபர் பலி: உடலை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

பொன்னேரி: அத்திப்பட்டு அருகே இன்று காலை மின்சார ரயில் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் வடமாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஏராளமானோர் பயணம் செய்தனர். இந்த ரயில், அத்திப்பட்டு – அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, ரயிலில் சிக்கி ஒரு வாலிபர் உயிரிழந்தார். இதனால் சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுபற்றி சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்டவாளத்தில் கிடந்த சடலத்தை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரயில் சேவை தாமதமானது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு உடல் அகற்றப்பட்ட பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

Tags : Athipattu ,Ponneri ,Chennai-Gummidipundi ,
× RELATED இலங்கை கடற்படையால் சிறை...