×

நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி மீது ஜீப்பை ஏற்றி கொடூர கொலை: சித்தப்பா, 2 மகன்கள் கைது

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி மீது ஜீப்பை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த மத்துருட்டு பூசாலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (34), விவசாயி. இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 3 வயதில் மகளும் உள்ளனர். ராஜேந்திரனின் சித்தப்பா வெங்கடாசலம் (எ) சின்னதுரை (55), ராசிபுரம் நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். ராஜேந்திரனுக்கும், வெங்கடாசலத்திற்கும் சொந்தமான பூர்வீக நிலம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அன்று முதல் இருவருக்கும் இடையே நிலப்பிரச்னை காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன், சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தனது வீட்டிற்கு அழைத்த வெங்கடாசலம், ராஜேந்திரன் மீது மிளகாய் பொடியை தூவி, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்களபுரம் போலீசார் இருதரப்பையும் நேரில் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை ராஜேந்திரன் தனது நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு தனது மகன்கள் ஜெகதீஸ்(28), கார்த்தி(25) ஆகியோருடன் ஜீப்பில் வந்த வெங்கடாசலம், மீண்டும் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், தனது ஜீப்பை எடுத்து வந்து, வயலில் நின்றிருந்த ராஜேந்திரன் மீது பயங்கரமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியானார்.

தகவல் அறிந்த அவரது உறவினர்கள் வயலுக்கு ஓடி வந்தனர். இதை பார்த்த ஜெகதீஸ் தப்பியோடி விட்டார். வெங்கடாசலம், கார்த்தி ஆகியோரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த மங்களபுரம் போலீசார், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி விமலா, ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து, வெங்கடாசலம், கார்த்தி, ஜெகதீஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் அலட்சியத்தால் கொலை: மனைவி கண்ணீர் பேட்டி
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் மனைவி புவனேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், `எனது கணவரின் பூர்வீக சொத்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அதில் நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். ஆனால், பிரிக்கப்பட்ட பாகத்தில் பங்கு இருப்பதாக கூறி, அவரது சித்தப்பா வெங்கடாசலம் அடிக்கடி எங்களிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, எனது கணவர் ராஜேந்திரனை, சமாதானமாக போகலாம் எனக்கூறி வீட்டுக்கு அழைத்து சென்ற அவரது சித்தப்பா, மகன்கள் 2 பேருடன் சேர்ந்து மிளகாய் பொடியை தூவி, சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து மங்களபுரம் போலீசாரிடம் புகார் அளித்தோம். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போதும், நாங்கள் போலீசில் புகார் அளித்தோம். அப்போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த கொலை நடந்து இருக்காது,’ என கண்ணீருடன் தெரிவித்தார்.

Tags : Namakiripettai ,Rajendran ,Poosaliyur ,Madhuruttu ,Namakkal district ,Bhuvaneswari ,
× RELATED VB G RAM G திட்டம் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!