சென்னை: தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஆட்சியை தொந்தரவு செய்ய மாட்டோம். திமுக அரசின் திட்டங்களை தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். மகளிருக்கு மாதம் ரூ.2,500 அளிப்பது கடினம். திமுக அரசு வழங்கியது போன்று மாதம் ரூ.1,000ஆவது வழங்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் பதவியேற்பு தள்ளிப்போகிறது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர். விஜயை கைகுலுக்கி சால்வை அணிவித்து வரவேற்ற ஆளுநர், நினைவுப் பரிசும் வழங்கினார்
விஜயின் கடிதத்தை ஏற்று ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடிதத்தில் 112 எம்எல்ஏக்களின் விவரம் மட்டுமே இருந்ததால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கோரியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து 2வது முறையாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விஜயின் சட்ட வல்லுநர்கள் குழு ஆளுநரை 2வது முறையாக சந்தித்து விளக்கம் கொடுத்தது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்காததால் விஜயின் பதவியேற்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், திமுக ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றிப் பார்க்கும் எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், விஜய் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளது குறித்துப் பேசிய ஸ்டாலின், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம். எங்களைப் போல மாதம் 1,000 ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தரும் விஜய்யின் வாக்குறுதி குறித்தும் சந்தேகம் தெரிவித்த ஸ்டாலின், அதைச் செய்தால் மகிழ்ச்சி என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
