×

என்ன ஆச்சு மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு? ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியில் பேட்டி தரும் தவெக எம்எல்ஏக்கள்: தமிழக மக்கள் அதிர்ச்சி

சிவகாசி: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள், செய்தி நிறுவனங்களுக்கு தமிழில் பேட்டி அளிக்காமல் தொடர்ந்து இந்தியில் பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுரை மத்திய தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற மதார் பதுரூதின், செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியில் மட்டுமே பதிலளித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப் பரபரப்பு ஓய்வதற்குள், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கீர்த்தனா வடமாநில தனியார் தொலைக்காட்சிக்கு இந்தியில் பேட்டியளித்து பரபரப்பை கூட்டியுள்ளார். இந்தியில் அவர் அளித்த பேட்டியில் ‘‘தவெக ஆட்சி அமைப்பது குறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என இந்தியில் தெரிவித்துள்ளார். மற்றொரு ஆந்திர செய்திச் சேனலுக்கு அவர் தெலுங்கு மொழியிலும் பேட்டி அளித்துள்ளார்.

முன்னதாக, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக, மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவெக உறுதியாக உள்ளது என தெரிவித்தது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து செய்தி நிறுவனங்களுக்கு தமிழில் பேட்டி அளிக்காமல் இந்தியில் பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஒன்றிய அரசின் மும்மொழி கல்விக் கொள்கைக்கான ‘பிஎம்’, திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய கல்வி அமைச்சகம் நேற்று கடிதம் எழுதியுள்ளது. அதில், பிஎம் திட்டத்தில் இணைவதற்கு விரைவில் கையெழுத்திடுமாறு குறிப்பிட்டிருந்தது. கடந்த திமுக ஆட்சியின் போது, மும்மொழி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயன்ற இந்த திட்டத்திற்கு அப்போதைய திமுக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உறுதியான நிலைப்பாட்டில் நின்றது. தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், முதல் பொதுக்குழுவில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி விட்டு, தற்போது இந்தியில் மட்டுமே பேட்டி அளித்து வருவதால் தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது, அ.ராசா உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வட இந்தியச் சேனல்களுக்குக் கூட தமிழில் பேட்டியளித்தனர். மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய தவெகவினர் குறைந்தது ஆங்கிலத்தில் கூட பேட்டி தரலாம். நேரடியாக இந்தியில் பேட்டி அளிப்பதன் மூலம், அவர்களது மும்மொழிக் கொள்கை எதிர்ப்புத் தீர்மானம் என்ன ஆனது என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Tags : Sivakasi ,Daweka ,Tamil Nadu Assembly ,Madurai Central Constituency ,
× RELATED சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில்...