×

ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்க்கு ஆளுநர் கெடு: 118 எம்எல்ஏக்கள் ஆதரவு பட்டியலை வழங்க உத்தரவு

சென்னை: தமிழக ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது, 118 எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளதால், இன்று பதவி ஏற்பு நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளதால், பதவி ஏற்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தாலும், 118 என்ற பெரும்பான்மை இலக்கை எட்ட முடியவில்லை. ஆனால் தனி மெஜாரிட்டி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கும்படி விஜய், தமிழக ஆளுநர் அர்லேகருக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி இருந்தார். அதேநேரத்தில் மெஜாரிட்டியை பெறும் வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் நடிகர் விஜய் ஈடுபட்டு வந்தார். தற்போது காங்கிரஸ் மட்டுமே வெளிப்படையாக அதரவு அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. விசிக, இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரவு அளிப்பது குறித்து எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேசிய பின்னர்தான் முடிவு எடுக்க முடியும் என்று அறிவித்து விட்டனர்.

இந்த பரபரப்பான சூழலில், தமிழக ஆளுநர் அர்லேகர் நேற்று மதியம் கேரளாவில் இருந்து சென்னை வந்தார். இதையடுத்து, தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று சந்தித்தார். அப்போது அவருடன், தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், வெங்கட்ராமன், நிர்மல்குமார் ஆகியோர் சென்றனர்.

கவர்னர் மாளிகை சென்ற தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநரின் தனி செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் தமிழக ஆளுநரை சந்தித்த விஜய்க்கு, ஆளுநர் அர்லேகர் பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். இதைத்தொடர்ந்து, ஆளுநரிடம், 106 தவெக எம்எல்ஏக்கள் தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தை அளித்தார். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், நாளை (இன்று) காலை 11.30 மணிக்கு முதல்வராக தனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் அர்லேகரிடம் விஜய் கோரிக்கை வைத்தார். ஆட்சி அமைத்து இரண்டு வாரத்தில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் உறுதி அளித்தார். விஜய் கூறியதை கேட்டுக்கொண்ட, ஆளுநர் இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து பதில் அளிப்பதாக உறுதி கூறினார். பின்னர் மதியம் 3.40 மணிக்கு விஜய் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்தனர்.

தவெக கட்சி தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியும் உடனடியாக கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் விஜய் தரப்பினருக்கு நேற்று இரவு வரை வரவில்லை. இதனால் நடிகர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. பதவி ஏற்பு விழாவுக்காக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்பதில் ஏற்பட்ட தொடர் சிக்கல் எழுந்ததால், பதவி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து தவெக தரப்பில் விசாரித்தபோது, ‘‘தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் தவெகவில் தற்போது 108 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஒரு பதவியை விஜய் ராஜினாமா செய்ய வேண்டும். காங்கிரசிடம் உள்ள 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். இதையும் சேர்த்தால் 112 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இன்னும் பெரும்பான்மைக்கு 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அதன்படி, 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் கொடுத்தால் மட்டுமே விஜய்க்கு முதல்வராக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று சொல்லி விட்டதால், கூடுதல் ஆதரவுக்காக சில கட்சிகளிடம் பேசி வருகிறோம். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவினர் ஆதரவு அளிக்க முன்வரவில்லை’’ என்றார்.

இதுகுறித்து, தமிழக ஆளுநர் அர்லேகர் கூறும்போது, ‘‘ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் கடிதம் தந்துள்ளார். மெஜாரிட்டியாக 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக விஜய் கூறியுள்ளார். மெஜாரிட்டியை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை வேண்டும் என கேட்டுள்ளேன். எம்எல்ஏக்களின் எண்ணிக்கை விவரத்தை சொல்வதாக விஜய் கூறியுள்ளார். 118 அல்லது மேற்பட்ட எம்எம்எல்ஏக்கள் ஆதரிப்பதை நிரூபிக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணி, வெளியில் இருந்து ஆதரவு என பல ஆப்ஷன்கள் உள்ளன. அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு முடிவு எடுப்பேன். குறிப்பிட்ட காலத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

அதன்படி மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய்க்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர், 2 நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தமிழக ஆளுநர் இன்று பிற்பகலில் கேரளா புறப்பட்டுச் செல்கிறார். இதனால் பதவி ஏற்பு நடைபெறுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. ஒருவேளை விஜய் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், திமுக அல்லது அதிமுக கட்சிகளை அவர் ஆட்சி அமைக்க அழைக்க சட்டத்தில் இடம் உள்ளதாக ஆளுநர் மாளிகை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆளுநர் இன்று பிற்பகலில் கேரளா புறப்பட்டுச் செல்கிறார். இதனால் பதவி ஏற்பு நடைபெறுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. ஒருவேளை விஜய் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், திமுக அல்லது அதிமுக கட்சிகளை அவர் ஆட்சி அமைக்க அழைக்க சட்டத்தில் இடம் உள்ளதாக ஆளுநர் மாளிகை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநருக்கு பூங்கொத்து கொடுக்காத விஜய்
வழக்கமாக ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்க செல்லும்போது, கட்சி தலைவர்கள் சால்வை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துவது வழக்கம். நேற்று தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்தபோது, ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு சால்வை, நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். முன்னதாக, விஜய் கவர்னர் மாளிகைக்குள் வந்தபோது ஆளுநரின் தனி செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆனால், விஜய் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்தபோது சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசு என ஒன்றும் வழங்காமல் கைகுலுக்கி மட்டும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Governor ,Kudos ,Vijay ,CHENNAI ,TAMIL GOVERNOR ,ARLEKAR ,TAMIL ,Tamil Nadu ,
× RELATED “சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி...