புதுடெல்லி: திருமண ஆசை காட்டி உடலுறவு கொள்வது எப்போதுமே பாலியல் பலாத்காரமாகாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ்பாய் கோவிந்த்பாய் மக்வானா என்பவர் மீது கடந்த 2021ம் ஆண்டு பிப்., மாதம் பாலியல் பலாத்காரப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், திருமண ஆசை காட்டி தன்னைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஐபிசி 376(2)(என்), 377 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், அந்த நபர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த நபர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ‘வயது வந்த ஆண் – பெண் நபர்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்த பரஸ்பர விருப்பத்துடன் கூடிய பாலியல் உறவு, பின்னாளில் கசப்பால் பிரிந்ததை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.
திருமண வாக்குறுதியை மீறும் எல்லா சம்பவங்களையும் பாலியல் பலாத்காரமாகக் கூற முடியாது’ என்று குறிப்பிட்டனர். இந்த அதிரடி தீர்ப்பின் மூலம் மும்பை உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீதான அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளன.
