பூந்தமல்லி: சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் மாநகர பணிமனை மற்றும் பஸ் நிலையம் 1994ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகரின் அனைத்து பகுதிகளுக்கும் 150க்கும் மேற்பட்ட பஸ்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. அய்யப்பன்தாங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளின் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் பஸ் நிலையத்தை நவீன முறையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் பயணிகள் அமர்வதற்கும் பஸ்கள் நிறுத்துவதற்கும் போதிய இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை செய்து பணிகளுக்கான அடிக்கலும் நாட்டப்பட்டது. 1.5 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் இந்த புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது. விரைந்து பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பஸ் நிலைய கட்டுமான பணிகள் முழு வீழ்ச்சியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது விரைந்து பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இதனால் அய்யப்பன்தாங்கல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.
