×

நடிகை ஜான்வி கபூர் மது அருந்துவாரா..? சமூக வலைதள செய்திகளுக்கு கண்டனம்

மும்பை: நடிகை ஜான்வி கபூர் தனக்கு மதுப்பழக்கம் இருப்பதாக பரவிய தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது தனது வாழ்வில் நடந்த ஒரு மோசமான சம்பவத்திற்கு பிறகு, அதிலிருந்து மீள அடிக்கடி மது அருந்தியதாக தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ‘நான் மதுவுக்கு அடிமையானவள் என்றோ அல்லது மதுவை தவறாக பயன்படுத்தியவள் என்றோ சொல்ல மாட்டேன். ஆனால் அந்த காலகட்டத்தில் அடிக்கடி மது அருந்தினேன். எனக்கு போதையாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அப்போது இருந்தது’ என்று கூறியிருந்தார்.

இந்த பழைய பேட்டியை அடிப்படையாக வைத்து, ஜான்வி கபூர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அதற்காக சிகிச்சை பெற்றார் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில், ஜான்வி கபூர் தனது ‘ஆப் தி ராக்ஸ்’ என்ற விழிப்புணர்வு அமைப்பு மூலம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். கிளிக்பைட் செய்திகளுக்காக தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அவர் சாடினார்.

மதுப்பழக்கம் தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் தான் ஒரு ஆதரவாளராக மட்டுமே செயல்படுவதாகவும், தனக்கு மது அருந்தும் பழக்கமோ அல்லது போதைக்கு அடிமையாகும் தன்மையோ கிடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இது போன்ற தவறான செய்திகள் உண்மையாகவே பாதிப்பில் இருப்பவர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags : Janhvi Kapoor ,Mumbai ,Bollywood ,
× RELATED 5 மாநிலங்களில் 7 தொகுதிகளில்...