×

சோம்பட்டு ஊராட்சியில் கட்டி முடித்தும் பயன்படாத கழிவறை கட்டிடம்: சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய சோம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் கிராமத்தில் கடந்த 2021ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்காக, ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் ஷீட் ஓடுகளால் அமைக்கப்பட்டு, சரியான குடிநீர் பைப்லைன் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால், அக்கழிவறை கட்டிடத்தை கிராம மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் அந்த கழிவறை கட்டிடம் எவ்வித பயன்பாடும் இன்றி, கடந்த 5 ஆண்டுகளாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அந்த கழிவறை கட்டிடத்தை சுற்றிலும் ஏராளமான முட்புதர் காடுகள் வளர்ந்திருப்பதுடன், அக்கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமாகி வருகிறது. மேலும், அப்பகுதியில் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சுற்றுப்புற சுகாதாரம் குறித்து ஒன்றிய அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், இப்பிரச்னை குறித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் சோம்பட்டு ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் எவ்வித பயன்பாடும் இன்றி வீணாகி வருகிறது.

எனவே, இக்கழிவறை கட்டிடத்தில் குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் முறையாக சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : BONNERI ,RS 5.25 LAKH ,EDAPPALAYAM VILLAGE ,SOMPATTU URATCHI, ,THIRUVALLUR DISTRICT ,BONNERI DISTRICT ,MEENCHUR UNION ,
× RELATED வர்த்தக சிலிண்டர் விலை அதிகரிப்பால்...