×

ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்: நிர்வாகம் அறிவிப்பு

சோழிங்கநல்லூர்: ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம், என நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்கவும், மெட்ரோ ரயில் நிறுவனம் சிஎஸ்கே நிறுவனத்துடன் இணைந்து ஐபிஎல் லீக் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ், அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்களும், கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான கியூஆர் குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

அதன்படி அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும். பச்சை வழித்தடத்தில் (வழித்தடம் – 2) உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டுமே வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : IPL ,Choshinganallur ,Metro Rail Company ,
× RELATED மத்தியப்பிரதேசத்தில் சுற்றுலாப் படகு...