டெல்லி: ஈரான் போர் நெருக்கடியால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் (ATF) விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை கிலோ லிட்டருக்கு 76.55 டாலர் அதிகரித்து, தற்போது 1,511.86 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக மேற்கொள்ளப்படும் விலை உயர்வாகும்.
இந்த விலை உயர்வு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணக் கட்டணங்கள் உயரக்கூடும். எனினும், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையில் ஒன்றிய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்திய விமான நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், உள்நாட்டுப் போக்குவரத்திற்கான எரிபொருள் விலையை மட்டும் அரசு கட்டுக்குள் வைத்துள்ளது.
விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் எரிபொருள் முக்கியப் பங்கு வகிப்பதால், சர்வதேச விமான போக்குவரத்துச் செலவு இனி கூடுதல் சுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
