சென்னை: தேர்தல் நடத்தும் அலுவலர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல க்யூஆர் கோடு மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம். வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 3 அடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த க்யூஆர் கோடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
அதன்படி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதை தவிர்க்க, இந்திய தேர்தல் ஆணையம் இசிஐ நெட்டில் க்யூஆர் கோடு குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் மற்றும் 5 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி தொடங்குகிறது. இதிலிருந்து இம்முறையானது அமல்படுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான அனைத்து பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் இந்த முறை நீட்டிக்கப்படும்.
கடந்த ஓராண்டில் இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள 30க்கும் மேற்பட்ட முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த முக்கியமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தரப்படுத்தப்பட்ட க்யூஆர் கோடு குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகளும் அடங்கும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாளத்தை சரிபார்க்க மூன்று அடுக்கு பாதுகாப்பு வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் நேரடியாகச் சரிபார்க்கப்படும். வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில், க்யூஆர் கோடு குறியீடு சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.
புதிய க்யூஆர் கோடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கு பொருந்தும். அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு அருகில் ஒரு ஊடக மையம் அமைக்கப்படும். ஊடகவியலாளர்களுக்கான அனுமதி, ஆணையத்தின் நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த நடைமுறையை திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், தடையற்ற மற்றும் பாதுகாப்பான அணுகல் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக, நிர்ணயிக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியமர்த்துவதும் அடங்கும். வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தை பேணுவதற்கு, இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டி உள்ளது. இதில் விஜய் தலைமையிலான தவெக புதிய கட்சி. இக் கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு தேர்தல் நடைமுறையே புதிது. தேர்தல் விதிகள் எதையும் அறியாது வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு இக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் வந்துவிடும் நிலை உள்ளது. இதுதொடர்பான, புகார்களும் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளது. அதேபோல அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் அதிகமாக கூடுவார்கள். அவர்களும் உள்ளே செல்ல முயற்சிப்பார்கள். இதைத்தொடர்ந்தே, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதை தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியது. இதன் தொடர்ச்சியாகத்தான் க்யூஆர் கோடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
* வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாளத்தை சரிபார்க்க மூன்று அடுக்கு பாதுகாப்பு வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
* முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் நேரடியாகச் சரிபார்க்கப்படும்.
* வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில், க்யூஆர் கோடு குறியீடு சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.
