- இலங்கை
- மகளிர் டி20ஐ
- இலங்கை பெண்கள்
- வங்காளம்
- ஷைலட்
- வங்காளதேசம் பெண்கள் அணி
- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
- டி 20 ஐயில்
சில்ஹெட்: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி, 21 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இலங்கை மகளிர் வென்றனர். இந்நிலையில், 2வது டி20 போட்டி சில்ஹெட் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதையடுத்து, இலங்கை அணியின் துவக்க வீராங்கனைகளாக ஹாசினி பெரேரா, கேப்டன் சமாரி அத்தப்பட்டு களமிறங்கினர். ஹாசினி 9 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த இமேஷா துலானி 27 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து அத்தப்பட்டு 42 ரன்னிலும் அவுட்டாகினர். பின் வந்தோரில் ஹர்சிதா சமரவிக்ரமா 29 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
20 ஓவரில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, 155 ரன்கள் வெற்றி இலக்குடன் வங்கதேச மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகள் திலாரா அக்தர் 23, ஜுவைரியா பெர்தூஸ் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த கேப்டன் நிகர் சுல்தானா 7 ரன்னிலும், ஷோபனா மோஸ்தாரி ரன் எடுக்காமலும் ரன் அவுட்டாகி வெளியேறினர்.
அடுத்து வந்த ஷொர்னா அக்தர் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் வங்கதேச மகளிர் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனால், இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரையும் இலங்கை மகளிர் கைப்பற்றி அசத்தினர்.
