×

ஆர்சிபியை வென்றது குஜராத்

அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று குஜராத் டைடன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐபிஎல் தொடரின் 42வது போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீசியது. முகம்மது சிராஜ் வீசிய 3வது ஓவரில் பெங்களூரு அணியின் துவக்க வீரர் ஜேகப் பெத்தேல் (5 ரன்), ரஷித் கானிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.

ரபாடா வீசிய அடுத்த ஓவரில் விராட் கோஹ்லி (13 பந்து, 1 சிக்சர், 5 பவுண்டரி, 28 ரன்), ரஷித் கானிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் (19 ரன்), அர்ஷத் கான் பந்தில் அவுட்டானார். ஜேசன் ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் ஜிதேஷ் சர்மா (1 ரன்) ஆட்டமிழந்தார். டிம் டேவிட் (9 ரன்), க்ருணால் பாண்ட்யா (4 ரன்), ரொமாரியோ ஷெபர்ட் (17 ரன்) சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

தேவ்தத் படிக்கல் மட்டும் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 40 ரன் விளாசினார். கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர், ஜோஷ் ஹசல்வுட் ஆட்டமிழந்தனர். அதனால், 19.2 ஓவரில் பெங்களூரு அணி, 155 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் தரப்பில், அர்ஷத் கான் 3, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா 2, முகம்மது சிராஜ், காகிஸோ ரபாடா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் 15.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹேசல்வுட் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் ஒரே ஓவரில் 24 ரன் விளாசிய கேப்டன் சுப்மல் கில் 43 ரன் (18 பந்து), பட்லர் 39 ரன் (19 பந்து) எடுத்தனர். டெவாடியா 17 பந்தில் 27 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags : Gujarat ,RCB ,Ahmedabad ,Gujarat Titans ,IPL ,Royal Challengers Bangalore ,Royal Challengers ,Bangalore ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு...