×

17 சவரன், 5 கிலோ வெள்ளி திருட்டு செய்யாறு அருகே மர்ம கும்பல் கைவரிசை அடுத்தடுத்து அண்ணன், தங்கை வீடுகளில்

செய்யாறு, மே 1: செய்யாறு அருகே அண்ணன், தங்கை வீடுகளில் 17 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராம விரிவாக்க பகுதி ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(44), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் இவரது சகோதரி ராஜஷோபா, குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 25ம் தேதி தங்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள மற்றொரு சகோதரி வீட்டிற்கு சென்றனர். அப்போது இவர்களின் உறவினர் மணி என்பவர் இரவில் இவர்களது வீடுகளுக்கு காவல் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி மணிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இரவில் காவலுக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் காலை அவர்களது வீடுகளுக்கு மணி சென்றபோது, இருவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி, ரமேஷூக்கும், ராஜஷோபாவுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ரமேஷ் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ராஜஷோபா வீட்டில் 9 சவரன் தங்க நகைகள், 2 கிலோ 700 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்கன் டாலர் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து ரமேஷ், ராஜஷோபா இருவரும் தனித்தனியே செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்தார். மேலும், வேலூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரமேஷ் மற்றும் ராஜஷோபா ஆகியோரின் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்து, இருவரது வீட்டில் தங்க நகைகள், பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Cheyyar ,Thiruvannamalai district ,Cheyyar, Puliyarambakkam ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த...