கண்ணமங்கலம், ஏப்.30: கண்ணமங்கலம் அருகே சாலையில் கிடந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த முன்னாள் ராணுவ வீரரின் நேர்மையான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாய்ராஜா(40). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் மதியம் கண்ணமங்கலம் பஜார் வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது, சாலையோரம் விலை உயர்ந்த செல்போன் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
அந்த செல்போனை மீட்ட சாய்ராஜா, அதனை தவறவிட்டவர் யாரென தேடினார். யாரும் கிடைக்காததால், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கண்ணமங்கலம் காவல் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் திருமால், பலராமன் மற்றும் தலைமை காவலர் முத்து ஆகியோரிடம் சாய்ராஜா ஒப்படைத்தார். முன்னாள் ராணுவ வீரரின் இந்த பொறுப்புணர்வை கண்டு போலீசார் அவரை பாராட்டினர். சிறிது நேரத்தில், அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பதற்றத்துடன் அங்கு வந்தார். தனது செல்போன் எங்கோ தவறி விழுந்து விட்டதாக ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தார். உடனே போலீசார், சாய்ராஜா ஒப்படைத்த செல்போனை காண்பித்து, அதற்கான அடையாளங்கள் மற்றும் செல்போன் எண்ணை கேட்டு உறுதி செய்தனர். பின்னர், எஸ்.எஸ்.ஐ திருமால் அந்த செல்போனை விவசாயியிடம் ஒப்படைத்தார்.
