×

பல்வேறு களேபரத்துடன் 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு மேற்கு வங்கத்தில் 93 சதவீதம் வாக்குப்பதிவு: மத்திய படைகள் பாஜவுக்கு உதவுவதாக மம்தா குற்றச்சாட்டு; தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவு மே 4ல் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில், 2வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் 93 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை என குற்றம்சாட்டிய முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய பாதுகாப்பு படைகள் பாஜவுக்கு உதவுவதாகவும் கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. கடந்த 23ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள 142 தொகுதிகளில் 2வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, நாடியா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ் ஆகிய 6 மாவட்டங்களில் மொத்தம் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், முதல் கட்ட தேர்தலைப் போலவே இம்முறையும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

ஹவுராவின் பாலி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மாற்று இயந்திரங்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மத்திய பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி விரட்டினர். பின்னர் காலை 8.30 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

எப்போதும் பிற்பகலுக்குப் பிறகு வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி இம்முறை காலை 8 மணிக்கு முன்பாகவே தனது வாக்கை செலுத்தினார். கொல்கத்தாவில் உள்ள தனது சொந்த தொகுதியான பவானிபூரில் உள்ள மித்ரா கல்வி நிறுவனப் பள்ளியில் மம்தா தனது வாக்கை செலுத்தினார். இம்முறை மம்தாவை எதிர்த்து பாஜ மாநில தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவதால் இத்தொகுதியின் முடிவு பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021 தேர்தலில் நந்திகிராமில் மம்தா, சுவேந்து அதிகாரியிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

வாக்கை செலுத்திய பின் பேட்டி அளித்த மம்தா, ‘‘மத்திய பாதுகாப்பு படைகளின் அட்டூழியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. இங்கு நடைபெறுவது துளியும் சுதந்திரமான நியாயமான தேர்தல் அல்ல. மத்திய படைகள் அரசியலமைப்பு சார்ந்த கடமையை செய்வதற்கு பதிலாக குறிப்பிட்ட கட்சியின் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. மத்திய படைகள் சாமானிய மக்களையும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களையும் துன்புறுத்தி வருகிறது. இது ஜனநாயகத்தை சிதைப்பதற்கு சமம்.

இத்தேர்தலில் பாஜ முறைகேடு செய்ய முயற்சிக்கிறது’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் முறைகேடுகள் நடப்பதாகவும் உள்ளூர் கட்சி தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, பவானிபூர் தொகுதியில் உள்ள சேத்லா, பத்மபுகூர் மற்றும் சக்ரபேரியா உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளுக்கு முதல்வர் மம்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நாடியா மாவட்டத்தின் சப்ரா பகுதியில், மாதிரி வாக்கெடுப்பின்போது பாஜ வாக்குச்சாவடி முகவர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது மண்டை உடைந்தது. சாந்திப்பூரில் உள்ள பாஜ முகாம் அலுவலகம் சூறையாடப்பட்டது. பங்கர் பகுதியில், தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடிகளுக்குள் நுழைவது தடுக்கப்பட்டதாக ஐஎஸ்எப் கட்சி குற்றம் சாட்டியது.

கொல்கத்தாவின் என்டாலி பகுதியில், ஒரு வாக்குச்சாவடிக்குள் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியிருந்ததையும், வாக்காளர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படாததையும் எதிர்த்துப் பேசியபோது, திரிணாமுல் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் தன்னைத் தாக்க முயன்றதாக பாஜ வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் குற்றம் சாட்டினார்.

பானிஹாட்டி பகுதியில், பாஜ வேட்பாளரும், ஆர்ஜி கார் மருத்துவமனை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் தாயாருமான ரத்னா தேப்நாத், வாக்களிக்க வந்த வயதான மூதாட்டி ஒருவருக்கு உதவ முயன்ற போது, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

பசந்தி பகுதியில் பாஜவின் பிகாஷ் சர்தார், 200-250 திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தனது வாகனத்தையும், ஓட்டுநரையும் தாக்கியதாக குற்றம் சாட்டினார். இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. முதல்கட்ட தேர்தலைப் போலவே இம்முறையும் வாக்கு சதவீதம் வேகமாக அதிகரித்தது. காலை 11 மணிக்கு 39 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல் 3 மணிக்கு 78.77 சதவீத வாக்குகளும், மாலை 5 மணிக்கு 89.88 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இறுதியாக மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 92.6 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 92.9 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் இந்த வரலாற்று சாதனை வாக்குபதிவு எட்டப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ளது. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

* பாஜவுக்கு ஓட்டு போடும் பட்டன் டேப் வைத்து மறைப்பு
தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் டைமண்ட் ஹார்பர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பால்டா பகுதியில் பல வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக பாஜ குற்றம்சாட்டியது. ஒரு தொகுதியில் பாஜவுக்கு வாக்களிக்கும் பட்டன் டேப் வைத்து மறைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சில இடங்களில் பாஜவுக்கு வாக்களிக்கும் பட்டன் கறுப்பு மையால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இது குறித்து மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் கூறுகையில், ‘‘வாக்குச்சாவடி எண் 144 மற்றும் 189ல் வாக்கு இயந்திரத்தில் டேப் ஒட்டப்பட்டதாகவும், கறுப்பு மை இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அது தொடர்பாக விசாரணை நடத்தி தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்படும். பல வாக்குச்சாவடிகளில் இதுபோன்ற முறைகேடும் நடந்திருந்தால் ஒட்டுமொத்த தொகுதிக்கும் மறுதேர்தல் நடத்தப்படும்’’ என்றார்.

* ஒரே வாக்குச்சாவடியில் சந்தித்த மம்தா-சுவேந்து
ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும், மம்தா பானர்ஜியும், பாஜவின் சுவேந்து அதிகாரியும் தங்களின் பவானிபூர் தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சக்ரபேரியாவின் 70வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் மம்தா-சுவேந்து அதிகாரி ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கவோ, மரியாதை நிமித்தமாக பேசிக் கொள்ளவோ இல்லை.

அப்போது பேட்டி அளித்த சுவேந்து அதிகாரி, ‘‘தனக்கு ஒரு வாக்கு கூட விழப்போவதில்லை என்பதை முதல்வர் மம்தா உணர்ந்து விட்டார். அதனால்தான் மத்திய படைகள், காவல்துறை பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகளை பயன்படுத்தி பாஜ முறைகேடு செய்ய முயல்வதாக குற்றம்சாட்டுகிறார். இது அவரது மன விரக்தியை காட்டுகிறது. அவரது காவல் துறையினருக்கு பதிலாக மத்திய படைகள் நியமிக்கப்பட்டிருப்பதால் மம்தா பயந்து போயிருக்கிறார். பவானிபூரில் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்’’ என்றார்.

அப்போது திரிணாமுல் ஆதரவாளர்கள் சுவேந்து அதிகாரியை திரும்பிப் போ என கோஷமிட்டு விரட்டினர். இது குறித்து சுவேந்து அதிகாரி, ‘‘மம்தா 50-60 குண்டர்களுடன் சுற்றித் திரிகிறார். அவர்கள் அனைவரும் வெளியாட்கள். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்வோம். இம்முறை யாரும் மிரட்ட அனுமதிக்க மாட்டோம்’’ என்றார். மம்தா ஆதரவாளர்கள் தன்னை தாக்க முயன்றதாகவும் சுவேந்து அதிகாரி கூறி உள்ளார்.

* தேர்தலுக்கு பிறகும் 700 கம்பெனி வீரர்கள்
வாக்குப்பதிவு முடிந்த பிறகும் மேற்கு வங்கத்தில் 700 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தங்கியிருப்பார்கள் என தேர்தல் அதிகாரி கூறி உள்ளார். கடந்த 2021ல் தேர்தல் முடிவுக்குப் பிறகு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்ததால் இம்முறை தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் அமைதியை காப்பதை நோக்கமாக கொண்டு மத்திய படைகள் தொடர்ந்து தங்கியிருக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இப்படையினர் தேர்தலுக்குப் பிறகு 60 நாட்கள் வரை மேற்கு வங்கத்தில் இருப்பார்கள் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : West Bengal ,Mamata ,BJP ,Tamil Nadu ,Kolkata ,Chief Minister ,Mamata Banerjee ,West… ,
× RELATED திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய...