வேலூர், ஏப்.30: வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் தேன் கூட்டை தீயணைப்பு துறையினர் அகற்றினர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 23ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் அரசு தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் காட்பாடி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வெளிப்புறப் பகுதியில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பது தெரியவந்தது. வாக்கு எண்ணும் போது, தேனீக்கள் கலைந்து வாக்கு எண்ணிக்கை இடையூறு ஏற்படுத்தும் என அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் அமைந்திருந்த தேன் கூட்டை வேலூர் தீயணைப்பு வீரர்கள் நேற்று அகற்றினர்.
