×

75,064 மையங்களில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காததால் தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 மையங்களில் நடந்த வாக்குப்பதிவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாததால், தமிழ்நாட்டில் எங்கும் மறுவாக்குப்பதிவு இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவின்போது சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் இயந்திர கோளாறுகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் தலைமை காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்த இடங்களில் வாக்குப்பதிவு முறையாக நடந்ததா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக நேற்று ஆய்வு செய்தது.

சென்னை ஹார்பர் தொகுதியில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்களுக்கு இடையே ‘பூத் ரிக்கிங்’ எனப்படும் வாக்குப்பதிவு முறைகேடு தொடர்பாக மோதல் வெடித்தது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பதிவான வீடியோ ஆதாரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நீண்ட நேரம் தடையானது. பின்னர் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலின்போது, ​​சென்னை, வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் பழுதடைந்த காகித மாதிரி இயந்திரம் ஒன்று இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதால், அங்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், 2026ம் ஆண்டு நடந்த தேர்தலில் இதுபோன்று பிரச்னைகள் எங்கும் நடைபெறாமல் அமைதியாக நடந்தது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படவில்லை. எனவே தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல மேற்குவங்க தேர்தலிலும் முதற்கட்ட வாக்குப்பதிவின் 44,376 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு பொதுத்தேர்தல் நிறைவடைந்ததையொட்டி, வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும், வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதை கண்டறிந்து, தேவைப்பட்டால் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கவும், படிவம் 17ஏ (வாக்காளர் வருகை பதிவேடு) மற்றும் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட்ட பிற தேர்தல் ஆவணங்களை வாக்குப்பதிவிற்கு பிந்தைய சரிபார்ப்பு குறித்த ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்த 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஏப்ரல் 24ம் தேதி (நேற்று முன்தினம்) பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 1,825 வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஆவணங்கள் சரிபார்ப்பு சுமுகமாக நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 4,023 வேட்பாளர்களுக்கும் சரிபார்ப்பு செயல்முறையில் பங்கேற்பதற்கான விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டன. ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடந்த 75,064 வாக்குச்சாவடிகளில், சரிபார்ப்பிற்கு பிறகு எந்த ஒரு மறுவாக்குப்பதிவும் பரிந்துரைக்கப்படவில்லை. சரிபார்ப்பிற்கு பிறகு, படிவம் 17ஏ மற்றும் தொடர்புடைய பொருட்கள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரின் முத்திரையிடப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டன.

ஏப்ரல் 23ம் தேதி நடந்த வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு இரட்டை பூட்டு முறை, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அறையின் கதவுகள்/தாழ்வாரங்களில் சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாதுகாப்பு அறைகளுக்கு ஒரு நாளில் இருமுறை நேரில் சென்று ஏற்பாடுகளை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு தினமும் ஒருமுறையும், தலைமையகத்திற்கு வெளியே உள்ள அறைகளுக்கு 3, 4 நாட்களுக்கு ஒருமுறையும் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். பாதுகாப்பு அறைகளை கண்காணிப்பதற்காக, அந்த அறைகள் அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தற்காலிக முகாம்களை அமைத்து தொடர்ந்து கண்காணிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,
× RELATED வாக்கு சதவீதம் எதுவும் மாறவில்லை;...