மீனம்பாக்கம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை பெங்களூருக்கு சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக தேர்தலில் வழக்கமான வாக்குபதிவுதான் நடந்துள்ளது. இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் சிறப்பு திருத்தம் மூலம், லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அவைகள் நீக்கம் செய்யப்படாமல் இருந்து, வாக்குபதிவு நடந்திருந்தால், பழைய மாதிரியே வாக்குபதிவு நடந்திருக்கிறது என்று நாம் பேசி இருப்போம்.
ஆனால் சிறப்பு எஸ்ஐஆர் திருத்தம் மூலம், வாக்குபதிவு செய்யப்படாமல், எண்ணிக்கையில் மட்டும் இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், கூடுதலாக வாக்குபதிவாகி இருப்பது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது. இது உண்மை இல்லை. ஒவ்வொரு 5 ஆண்டு தேர்தலுக்கு பின்பும், புதிய வாக்காளர்கள் 20 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இணைவார்கள். அது எண்ணிக்கையில் கூடுதலாக சேரும். இந்த தேர்தலில், 20 லட்சம் முதல், 25 லட்சம் வரை புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் போட்ட வாக்குகள்தான் கூடுதலாகி உள்ளன. இது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமாக நடப்பதுதான்.
இதில் புதிது எதுவும் இல்லை. இந்த தேர்தலில் மீண்டும் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, மாபெரும் வெற்றியை பெரும். இதை களத்தில் மக்களை நேரடியாக சந்தித்த அனுபவத்தில் இருந்து உணர்கிறோம். தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று நான் எப்போதும் சொல்லவில்லை. தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல் மாறும் என்று தான் சொல்லி இருந்தேன்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, விஜய் வாங்கிற வாக்குகள் சதவீதத்தை பொறுத்து, தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவு வரட்டும். அதன் பின்பு பார்த்து கொள்ளலாம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
