×

கிடுகிடுவென சரியும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் – விவசாயிகள் கவலை

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவனி சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கான நீர்வரத்து கணிசமாக குறைந்து உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 66.17 அடியிலிருந்து 65.62 அடியாக சரிந்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 9.2 டிஎம்சி ஆகும். காலை நிலவரப்படி இந்த அணைக்கு 146 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஈரோடு , கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2.47 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. மொத்தம் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. அதே நேரம் பாசனத்துக்கு நீர்வரத்தை விட அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 200 கன அடி நீர் என மொத்தம் பாசனத்திற்காக 2500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் போதுமான மழை இல்லாததன் காரணமாக, தொடர்ந்து அப்குதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பவானிசாகர் அணையின் நீர் இருப்பு, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரம் சுமார் 72.28 அடி நீர்மட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Bhavanisagar dam ,Erode ,Bhavani Sagar Dam ,Bhavani estuary ,
× RELATED சென்னை சாலைகளில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்.