கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதியில், நேற்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மாலை 6 மணியானதை அடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பும் பணியில் தேர்தல் அலுவலக பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் கொடைக்கானலை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், தங்களது வாக்குகளை செலுத்துவதற்காக நேற்று சென்னையிலிருந்து கிளம்பி வந்தனர்.
சென்னையில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலாலும், பேருந்துகள் தட்டுப்பாட்டாலும் சுமார் 15 மணி நேரம் கடந்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு மாலை 6.05 மணிக்கு வந்தனர். ஆனால் வாக்குகள் செலுத்தும் நேரம் முடிந்து 5 நிமிடம் ஆனதால் கேட் அடைக்கப்பட்டது. வாக்களிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரும் வாக்குகள் செலுத்தாமல் லக்கேஜ்களுடன் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.
