விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஊழியர், முதியவர் விபத்தில் பலியான வழக்கில் ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், சத்யகண்டநல்லூரை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவர் கடந்த 2023 ஜூன் 4ம்தேதி பைக்கில் சென்றபோது அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனிடையே அவரது மனைவி வசந்தா நஷ்டஈடு கேட்டு, விழுப்புரம் மோட்டார் வாகன சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம் கடந்த 2024 நவம்பர் 15ம்தேதி ரூ.7,24,500 இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டார். ஆனால், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகை வழங்காததால் மீண்டும் கட்டளை நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வட்டியுடன் சேர்த்து ரூ.9,01,525 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இல்லையென்றால் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் நீதிமன்ற ஊழியர்கள் நேற்று விழுப்புரம் பேருந்து நிலையத்தில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை அதிரடியாக ஜப்தி செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் அருகே பிடாகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(38) என்பவர் வளத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2024 ஏப்ரல் 18ம்தேதி செஞ்சி கூட்ரோடு பகுதியில் சென்றபோது விழுப்புரம் அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார். அவரது மனைவி தீபாவும் இழப்பீடு கேட்டு அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ரூ.37,12,233 இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கடந்த 2025 ஏப்ரல் 5ம்தேதி உத்தரவிட்டார். ஆனால், இழப்பீட்டு தொகை வழங்காததால் மீண்டும் கட்டளை நிறைவேற்று மனுதாக்கல் செய்த நிலையில் வட்டியுடன் சேர்த்து ரூ.43,46,231 வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் பேருந்தை ஜப்தி செய்ய உத்தர விட்டார்.
இந்த வழக்கிலும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகை வழங்காததால், நேற்றைய தினம் விழுப்புரத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரேநாளில் ஜப்தி செய்யப்பட்ட 2 பேருந்துகளும் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
