சென்னை: தேர்தலுக்காக வாக்களிக்க சொந்த ஊர் சென்ற பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அனைத்து பகுதிகளுக்கும் ஆம்னி பேருந்துகளில் தற்போது சாதாரண மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கட்டணத்தில் டிக்கெட்டுகள் கிடைத்து வருகின்றன.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் மூலம் 9 ஆயிரம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, சராசரியாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும், பெரும்பாலான பேருந்துகள் வழக்கமான கட்டணத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், 9 ஆயிரம் பயணங்களில் ஒரு சில பயணங்களுக்கு மட்டும் சங்கங்கள் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதலாக சிலர் ஆன்லைனில் டிக்கெட் கட்டணங்களை வெளியிட்டிருந்தனர்.
இதுகுறித்து உடனடியாக தமிழக அரசுத் துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட பயணங்களுக்கான கட்டணங்கள் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளன. மேலும், சங்கங்கள் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை மீறாமல் டிக்கெட் கட்டணம் வசூலிக்க அனைத்து டிராவல்ஸ் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சென்னை முதல் தமிழகத்தின் தென்பகுதிகள் வரை பயணிகள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றச் செல்லும் வகையில், டிக்கெட் கட்டணங்களை அரசும் சங்கங்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
அதிகபட்ச கட்டண விவரங்களை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் இணையதளமான www.aoboa.co.in மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், இதுகுறித்த புகார்களை 9043379664 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். நேற்று முன் தினம் சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், பயணிகளிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி வழங்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு சார்பாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நம்பிக்கையுடன் முன்பதிவு செய்து, குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
