×

சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும்… ஏன்? எதற்கு?

நன்றி குங்குமம் தோழி

நமது முன்னோர்கள் ஆரோக்கியத்துக்கு உகந்த பலவிதமான உண்மைகளை போகிற போக்கில் மிக சூட்சுமமாக சொல்லி வைத்திருப்பார்கள். அவற்றில் ஒன்றுதான், ‘சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் காலாற நடப்பது.’ அதிலும் குறிப்பாக, கர்ப்பிணிகளை உணவு உண்ட பிறகு சிறிது நேரம் நடக்கச் சொல்வார்கள். ஏன் அவ்வாறு நடக்கச் சொல்கிறார்கள் என்று ஆராய்ந்தால், அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் காரணங்கள் புலப்படக்கூடும்.அது என்ன அறிவியல் காரணங்கள் என்பது தொடங்கி, ஏன் நாம் இதை செய்ய வேண்டும்? அவ்வாறு செய்வதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது வரை அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

சாப்பிட்ட பிறகு நடக்கும் மாற்றங்கள்…

நாம் உணவு அருந்தியதும் நம் வயிற்றில் உள்ள மாவுச் சத்துதான் முதலில் செரிமானம் ஆகிறது. பிறகு குடலில் இருந்து நேரடியாக குளுக்கோஸ் (சர்க்கரை சத்து) ஆக மாறி நம் ரத்த ஓட்டத்தில் கலக்கும். ரத்தத்தில் கலப்பதினால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். சீராக இல்லாமல் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்(Glucose Spike) போது பல பாதிப்புகள் உடலில் நிகழ்கிறது.
உடனடி பாதிப்புகளாக: மூளை மூடுபனி (Brain Fog), சாப்பிட்டு இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பசி எடுப்பது, இனிப்பு உணவு வகைகள் மீது உண்ணும் ஆர்வம் அதிகரிப்பது.
நீண்ட கால பாதிப்புகள்: இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகரிப்பது, நீரிழிவு நோய், ஹார்மோன்களின் சமச்சீரின்மை, பி.சி.ஓ.டி, ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தையின்மை, உடற்பருமன், கொழுப்படைந்த கல்லீரல், சரும சுருக்கம்.

நடைப்பயிற்சி…

நடப்பதினால் நம் உடலில் உள்ள தசைகள் வேலை செய்கிறது. குறிப்பாக, (கண்டங்)கால் தசைகள். அதனால் அந்த தசைகள் இயங்குவதற்கு ரத்த சர்க்கரை அளவை ரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதன் விளைவாக திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.

சாப்பிட்ட பிறகு நடப்பதால் என்ன ஆகிறது…?

சாப்பிட்ட பிறகு நமது குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கிறது. அதன் பின் நாம் நடப்பதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை சத்து நேராக கால் தசைகளுக்கு செல்கிறது. குறிப்பாக, கண்டன் தசைகளில் ஒன்றான சோலியஸ் தசைக்கு (Soleus Muscles) செல்கிறது. இதனால் சாப்பிட்ட பிறகு உடனடியாக அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், 20 முதல் 40 நிமிடங்கள் வரை போதுமானது.

தடுக்கப்படும் நோய்கள்…

* மூளை மூடுபனியை தடுத்து நிறுத்த முடியும்.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.
* நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையான Pre Diabetes-ல் வரும் அறிகுறிகளை தடுக்கலாம்.
* ஹார்மோனல் பாதிப்புகளை தடுக்கலாம்.
* இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பசி எடுப்பதை தடுக்கலாம்.
* பி.சி.ஓ.டி. பிரச்னைகளிலிருந்து வெளிவரலாம்.
* நீரிழிவு நோய் தடுக்கப்படும்.
* இளமையிலேயே முதுமையாக தோற்றம் அளிக்கும் சருமத்தை தடுக்கலாம்.
* ஞாபக மறதி நோய், கொழுப்பு படிந்த கல்லீரல், குழந்தையின்மை மற்றும் வேறு சில வயிற்றுக் கோளாறுகளையும் இதன் மூலம் தடுக்கலாம்.

இயன்முறை மருத்துவம்…

இயன்முறை மருத்துவத்தில் உடல் எடை குறைப்பிற்காக வருபவர்களிடமும், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வருபவர்களிடமும், பி.சி.ஓ.டி போன்ற வேறு பல சிக்கல்களில் வருபவர்களிடமும் முதலில் நாங்கள் சொல்வது, ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நீங்கள் சாப்பிட்ட பின் நடக்க வேண்டும் என்பதே. இப்படி செய்வதனால் இயல்பாகவே உடல் எடை கட்டுப்பாட்டில் வருகிறது. அதேபோல சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் வருகிறது.

நடப்பது பிடிக்கவில்லை என்றால், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து எடுத்த இடத்தில் வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என உடல் தசைகள் இயங்கும் மாதிரியான வீட்டு வேலைகளையும் சாப்பிட்ட பிறகு செய்யலாம். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் உட்கார்ந்த இடத்தில் அமர்ந்தபடியே கால்களை மட்டும் மேல் கீழ் அசைக்கலாம். அதாவது, தையல் இயந்திரத்தில் செய்வது போன்று.

மொத்தத்தில் சின்னச் சின்ன பழக்க வழக்கங்கள்தான் நமக்குப் பெரிய பெரிய வெற்றியை ஆரோக்கியத்தில் தருகிறது. இதனை ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்து எது நல்லது, தீயது எனப் பிரித்து பார்த்து அதில் நல்ல விஷயங்களை நம் அன்றாட பழக்க வழக்கங்களில் சேர்த்துக் கொண்டாலே போதும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக சிறகடித்துப் பறக்கலாம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Tags : Kumkum ,
× RELATED உடல் பருமன் – மனநலத்தின் பங்கு!