×

பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!

சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன். தற்போது ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ தொடரின் மூலம் மக்களால் கொண்டாடப்படும் நாயகியாக மாறிவிட்டார். இது தவிர, வெப் தொடர்கள் நடிப்பது, போட்டோ ஷூட்கள் என பிஸியாக இருக்கும் பார்வதியின் பிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

ஒர்க்கவுட்ஸ்

நான் ஒரு ஃபிட்னெஸ் ப்ரீக் என்று சொல்ல முடியாது. ஆனால், சமீபகாலமாகதான், தினசரி ஒர்க்கவுட் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன். அதிலிருந்து தினசரி ஜிம் சென்று ஒர்க்கவுட் செய்ய தொடங்கினேன். சூட்டிங் இருக்கும்போது ஒர்க்கவுட் செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், ஷாட் இடைவேளைகளில் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் நடந்துகொண்டே இருப்பேன். இதுவும் உடலில் சேரும் அதிகப்படியான கலோரியை எரிக்க உதவுகிறது. மற்றபடி எனது ஜிம் ட்ரைனர் என்ன விதமான ஒர்க்கவுட்களை சொல்கிறாரோ அதை செய்து வருகிறேன்.

டயட்

பேஸிக்கா நான் வெஜிடேரியன். அதனால் வெஜிடேரியன் ஃபுட்டி என்று சொல்லலாம். அந்தளவுக்கு வெஜிடேரியன் உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். திரைத்துறைக்கு வந்த பிறகு, உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது முக்கியம் என்பதை உணர்ந்து அதிலிருந்து எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். மற்றபடி காய்கறிகள் மற்றும் பழங்கள், நட்ஸ் வகைகள் என ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக் கொள்கிறேன்.

பசிக்கும்போது நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக, பழங்கள் அல்லது பழச்சாறுகள் எடுத்துக்கொள்வேன். அதுபோன்று, தண்ணீர் நிறைய குடிப்பேன். இது எனது சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நான் காலை, மதியம் இரண்டு வேளைதான் உணவு எடுத்துக்கொள்வேன். இரவு உணவை பொருத்தவரை, மாலை 6 மணிக்கே முடித்துவிடுவேன். அதன்பிறகு இரவில் சாப்பிடமாட்டேன். இது தவிர தினசரி இரண்டுவேளை க்ரீன் டீ எடுத்துக் கொள்வேன். இதுதான் எனது உணவுப் பழக்கவழக்கங்கள்.

பியூட்டி

பியூட்டியை பொருத்தவரை நாம் தினமும் நமது சருமத்துக்குத் தேவையான விஷயங்களை 5 முதல் 10 நிமிடமாவது கவனித்து செய்ய வேண்டும். உதாரணமாக, நாம் எப்படி தினசரி குளிக்கிறோமோ எப்படி தினசரி சாப்பிடுகிறோமோ அதுபோன்று, நமது சருமத்துக்கும் கொஞ்ச நேரத்தை ஒதுக்கித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் நமது சருமம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். நமது லுக் நன்றாக இருந்தாலே ஒரு தன்னம்பிக்கை தானாக நம்முடன் வந்து ஒட்டிக்கொள்ளும்.

என்னுடைய தினசரி ஸ்கின் கேர் ரொட்டீன் என்றால், தயிர், தேன், தக்காளி, உருளைக்கிழங்கு என நாம் சாப்பிடுகிற பல உணவுப் பொருளே நமது சருமத்தை பாதுகாக்கும். அதுபோன்று, அவரவர் சருமத்துக்கு ஏற்ற பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். என்னைப் பொருத்தவரை, அரிசி களைந்த நீர், கடலை மாவு, பயத்தம் மாவு, அரிசி மாவு, காபி பொடி போன்ற கிச்சன் பொருட்களே எனது சரும பளபளப்புக்கு மிகவும் உதவுகிறது.

பொதுவாக, நான் தினசரி இரவில் மாய்ச்சுரைஸர் போட்டு தூங்குவதால், காலை எழுந்ததும். முகத்தை க்ளென்ஸிங் செய்துவிட்டு, அரிசி களைந்த நீரை முகத்தில் தடவி பத்து நிமிடம் வைத்திருப்பேன். பின்னர், ஐஸ் க்யூப்களை முகத்திற்கு வைப்பேன். இது சருமத்தை இறுக செய்யும். பின்னர், முகத்தை கழுவிவிட்டு, எஸ்.பி.பி., மாய்ச்சுரைஸர் போன்றவற்றை போட்டுக் கொள்வேன். அதுபோன்று, இரவில் மேக்கப்பை களைந்துவிட்டு கட்டாயம் மாய்ச்சுரைஸ் போட்டுக்கொண்டுதான் தூங்கச் செல்வேன். அதுபோன்று சமீபத்தில் ஃபேஸ் மசாஜ் பற்றி தெரிந்துகொண்டேன். இப்போது அதையும் தினசரி செய்து வருகிறேன். நல்ல மாற்றம் தெரிகிறது.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Parvati Venkataraman ,Fitness ,Vijay ,Parvathi Venkataraman ,
× RELATED உணவுப் பழக்க வழக்கங்கள்…