சொன்னாரு: பள்ளி வளாகத்தை சுத்தம் மற்றும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள ‘‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் 2023 செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
செஞ்சாரு: தமிழ்நாடு அரசின் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் 2023 செப்டம்பர் 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித் துறை இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பள்ளி வளாகங்களைத் தூய்மையானதாகவும், சுகாதாரமானதாகவும், சுற்றுச்சூழல் நட்பானதாகவும் மாற்றுவதாகும். பள்ளிக்கல்வித் துறை, சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, வனத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித் துறை, மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன.
மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் மாவட்டக் குழு, வட்டார அளவில் வட்டாரக் குழு, பள்ளி அளவில் பள்ளிக் குழு மற்றும் ஐந்து மாணவர்களைக் கொண்ட உபகுழுக்கள் என பல அடுக்குகளில் பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத் தூய்மை, வகுப்பறைப் பராமரிப்பு, சுய சுகாதார விழிப்புணர்வு, கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் இல்லா வளாகம், காய்கறி தோட்ட அமைப்பு, மரக்கன்று நடுதல், மறுசுழற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிகளில் விளையும் காய்கறிகளை சத்துணவில் பயன்படுத்தும் வகையில் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த இளைஞர்-சுற்றுச்சூழல் மன்றங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இறைவணக்கக் கூட்டத்தில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ உறுதிமொழி எடுக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.1,000, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.5,000 வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக இத்திட்டத்திற்கு 2023-24 கல்வியாண்டில் 13,208 பள்ளிகளுக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு ‘சிறந்த தூய்மைப் பள்ளி’, ‘சிறந்த பசுமை வழிகாட்டி ஆசிரியர்’, ‘சிறந்த பசுமை நட்சத்திர மாணவர்’ உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் தமிழ்நாடு அரசின் கல்வித் தரத்தை உயர்த்தும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. எங்கள் பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசுப் பள்ளிகளும் ‘மிளிரும் பள்ளி’யாக மாறி, மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
