- எம்.கே. ஸ்டாலின் அலை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் அரசு
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சுகாதார அமைச்சர்
- சைதாப்பேட்டை சட்டமன்றம்
- சைதாப்பேட்டை
ஒன்றிய அரசே, தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரம் விருதுகளை வழங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான மா.சுப்பிரமணியன் அளித்த சிறப்பு பேட்டி:
* சைதாப்பேட்டை தொகுதியில 4வது முறையாக போட்டியிடும் உங்களுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? கடந்த 2001ல் வை.பெருமாள் மறைவுக்குப் பிறகு முதல் தடவையாக சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடுகிற வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜெயலலிதா தலைமையிலான அரசு இருந்தது. அப்போது, வன்முறை என்றால் தேர்தலில் எப்படிப் பண்ணனும் அப்படிங்கிறதை வித்திட்டுக் காட்டினார்கள். ஒட்டுமொத்த அமைச்சர்களும், வாக்குச்சாவடிகளில் உட்கார்ந்து அவங்களே ஓட்டு போட்டார்கள்.
அந்த மாதிரி இருந்தும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதற்கடுத்து 2016, 2021 இரண்டு முறை நின்றேன். 2016ஐ பொறுத்தவரை அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு எதிராக 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 2021 தேர்தலில் சைதை துரைசாமியை 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இது மூன்றாவது தடவை.
எனக்குத் தெரிந்து, இதுவரை இந்த 1977க்குப் பின்னால் எனக்கு இருக்கிற அனுபவத்தில் வாக்காளர்கள் இந்த அளவுக்கு திமுக ஆதரவு நிலை எடுத்திருப்பது என்பது இதுதான் முதல் முறை. ஒட்டுமொத்தமாகவே தமிழ்நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை வீசிக் கொண்டிருக்கிறது. சைதாப்பேட்டையில் அது சிறப்பாக இருக்கிறது.
* சைதாப்பேட்டையை தொழில் நகரமாக மாற்றுவேன் என்ற வாக்குறுதி அளித்திருக்கிறீர்கள்? அதற்காக புதிய திட்டங்கள் என்ன கொண்டு வரப் போகிறீர்கள்? சைதாப்பேட்டையில தான் கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இருக்கு. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக துணை முதல்வரால் ரூ.10 லட்சம் கோடிக்கு மேலான வெளிநாடு முதலீடுகள் மூலம் தொழில் புரட்சியே ஏற்பட்டிருக்கிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் வரும்போது சாதாரணமாக இந்தச் சிறு குறு தொழில்கள் வளர்ச்சிங்கிறது அதிகமாகும்.
அதோட உதிரி பாகங்கள் தயாரிக்கிற நிறுவனங்கள் ஈக்காட்டுத்தாங்கல்லில் 5,000 சிறு கூடங்கள் இருக்கிறது. இந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்கு தேவையான வசதிகள், மின் வசதி உள்ளிட்ட எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்திருக்கிறோம். கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை முதல்வர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடனே கொடுத்தார்கள். ரூ.500 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில வேற எந்த மாநில அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இந்த மருத்துவமனையில இருக்கிறது.
அதே வளாகத்தில் இந்தியாவிலேயே வயது மூத்தவர்களுக்கான பிரத்யேக மருத்துவமனை ஒன்றும் திறக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதே வளாகத்தில் ஆறரை ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.417.7 கோடி மதிப்பீட்டில் ஒரு குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. 15 மாத காலத்துல அந்தப் பணிகள் நிறைவுற்று விடும். அந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை உலகிலேயே மிகப்பெரிய குழந்தைகளுக்கான மருத்துவமனையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உலகிலேயே மிகப் பெரிய குழந்தைகளுக்கான ஆராய்ச்சி மையமும் அதில் வரப்போகிறது. இந்த மூன்றும் சைதாப்பேட்டைக்கு கிடைத்திருப்பது பெரிய அளவிலான சிறப்பு.
* மாரத்தான் ஓட்டப் பந்தயத்துல அடிக்கடி கலந்து கொள்ளும் நீங்கள் உடல் நலத்தைப் பேணுவது குறித்து மற்றவர்களுக்கு சொல்லும் தகவல் என்ன? கடந்த 2004 அக்டோபர் 17ம் தேதி ஒரு பெரிய விபத்தில் சிக்கி வலது கால் மூட்டு 6 துண்டாகி நொறுங்கி, தலையில பெரிய பலத்த காயம். அப்போ மருத்துவர்கள் இனிமேல் வாழ்க்கை முழுவதும் தரையில சம்மணம் போட்டு உட்கார முடியாது, வேகமா நடக்க முடியாதுன்னு சொன்னாங்க. அதையே ஒரு சவாலா எடுத்துக்கிட்டு ஒரு 2004லிருந்து 2014 வரைக்கும் தொடர்ச்சியாக நடந்து நடந்து, யோகா பண்ணி உடற்பயிற்சி மூலம் 2014ல் 21 கிலோ மீட்டர் தூரத்துக்கான மாரத்தான் ஓடினேன்.
நம்மால் முடியும் என்று உறுதியானதுக்கு அப்புறம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறேன். இதுவரைக்கும் 166 மாரத்தான் ஓடி முடிச்சிருக்கிறேன். என்னுடைய சோசியல் மீடியாவில் அஞ்சேகால் லட்சம் நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் நான் போடும்போது இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி தான் இந்த மாரத்தான்.
அதனால இப்போவும் கூட என்னை எங்க பார்த்தாலுமே என்னை முன்னாள் மேயர் என்றோ அல்லது இப்போ அமைச்சர் என்றோ முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்றோ சொல்வதை காட்டிலும் எங்க பார்த்தாலும் ஓடுறாரே என்பது தான் தமிழ்நாட்டில் பிரபலமடைந்திருக்கிறது. அதுமட்டுமில்ல என்கிட்ட ஒரு 10 பேராவது தினமும் உங்களால் நான் நடக்குறேன் என்கிறார்கள். உங்களுக்கு நீரிழிவு நோய் ஒரு கால் நூற்றாண்டுக்கு மேலாக இருந்தும் கூட நீங்க இந்தப் பயிற்சி எடுக்கிறது சிறப்பு என்கிறார்கள். இது ஒரு பெரிய மகிழ்ச்சியான விஷயம்.
* சைதாப்பேட்டைக்கு கொண்டு வந்துள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, முதியோர் மருத்துவமனை உள்ளிட்ட பெரிய திட்டங்கள் வாக்குகளாக மாறுமா? நான் வாக்கு கேட்டுப் போகும் போது, இவ்வளவு பெரிய மருத்துவமனை திறந்திருக்கிறீர்கள், நான் இந்த அளவில் பயன்பட்டேன் என்று ஒவ்வொருத்தரா சொல்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதியோர்களும், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் பிரத்யேக மருத்துவமனை கொடுத்திருக்கிறீர்கள்.
எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று சொல்வதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். இப்போ குழந்தைகள் மருத்துவமனையும் அந்த இடத்துக்கு வரும்போது ஒரு பெரிய மெடிக்கல் ஹப்பா மாறி உலகத்திலேயே ஒரு வளாகத்தில் இத்தனை பெரிய சிறப்புக்குரிய கட்டமைப்புகள் சைதாப்பேட்டையில் இருக்கிறது என்ற புகழை முதல்வர் தந்திருக்கிறார்.
சைதாப்பேட்டைக்கு இன்னொரு பெருமை அடையாரில் இருந்து சைதாப்பேட்டை வரைக்கும் ரூ.1500 கோடியில் அடையாரைத் தூய்மைப்படுத்திச் சீர்படுத்துகிற பணிக்குத் திட்டமிட்டுப் பணிகள் தொடங்க இருந்தார்கள். அங்கு வசித்தவர்களை வேறு பகுதிக்கு அனுப்பாமல் அங்கேயே வீடு கட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர் ஏற்றுக் கொண்டு இப்போது நாகிரெட்டி தோட்டம் என்ற ஒரு பகுதியில் 1,700 புதிய குடியிருப்புகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டிய செய்தி, சைதை தொகுதி ஏழை மக்களுக்குப் பெரிய அளவில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
* சுகாதாரத்துறை அமைச்சராக ரொம்ப பிஸியா இருந்த நிலையில் தொகுதிக்காக நேரம் ஒதுக்க முடிந்ததா? என்னுடைய வீடு, மாவட்ட அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் எல்லாமே சைதாப்பேட்டையில் தான் உள்ளது. எனவே நான் வெளியூருக்குப் போகாத நாட்களில் பெரும்பகுதி தொகுதியில தான் இருப்பேன். காலையில போய் அந்த அலுவலகத்தில் இருப்பேன். கட்சி வேலைகள் பார்க்க வேண்டும் என்றால் சைதாப்பேட்டைக்கு தான் செல்ல வேண்டும். காலையில் உடற்பயிற்சி செய்வதும் எம்ஆர்சி ரேஸ் கோர்ஸ்சில் தான். இது எல்லா வகையிலும், தொகுதியுடன் தொடர்பில் இருப்பதால் ஒரு நாள் கூட நான் வெளியில இருந்ததாக நினைத்ததில்லை.
* சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பு செய்த திட்டங்களிலேயே சாதனை திட்டம் என்று எதை நினைப்பீர்கள்? என்னுடைய சாதனை என்பதை விட இது முதல்வரின் சாதனை தான். அவருடைய அரசின் சாதனை. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம் பெறுவோம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம், செயற்கை கருத்தரித்தல் மையங்கள், இப்போ 14 வயது இளம் பெண்களுக்குப் புற்றுநோய் வராமல் தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி திட்டம் இந்த மாதிரியான திட்டங்கள் எல்லாமே சிறப்பு திட்டங்கள்.
வேற எந்த அரசும இவற்றை பண்ணவில்லை. இதனால், ஒன்றிய அரசே இதுவரைக்கும் 2,000 விருதுகள் தந்துள்ளது. இது தமிழக சுகாதாரத்துறையின் இமாலய சாதனை. இதைக் கடந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா.சபை விருதை பெற்றுள்ளோம். இது இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தில், ஒரு துறைக்கு ஐநா சபை தந்த முதல் விருது.
* இந்த சிறப்பு திட்டங்கள் திமுக கூட்டணியின் வாக்குகளாக மாறும் என எதிர்பார்க்கிறீர்களா?
கண்டிப்பாக மாறும். ஏனென்றால் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு தான் தெரியும். குறிப்பாக மலைக் கிராமங்களில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 2,200 மலைக் கிராமங்கள் உள்ளன. இதில், நானே 400-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்குப் போயிருக்கிறேன். இதற்கு முன்னால் இங்கு எந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் போனது கிடையாது.
ஒவ்வொரு இடத்துக்கு போகும் போது 15 கி.மீ., நடந்து தான் போவேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கி.மீ., நடக்க வேண்டும். சத்தியமங்கலம் பக்கத்துல 20 மலை கிராமங்களுக்குப் போக 30 கி.மீ., நடந்தே சென்றேன். பழங்குடியின மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் தான் இப்போ பெரிய பலனுள்ள திட்டமா இருந்து கொண்டிருக்கிறது. பெரிய அளவில் பலன் பெற்றுள்ளனர். பழங்குடியினரைப் பொறுத்தவரை ஒரு வாக்கு கூட மாற மாட்டார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. காரணம் அந்த அளவுக்கு மருத்துவத் திட்டங்களின் மூலம் அவர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.
* மருத்துவமனை கட்டினால் மட்டும் போதாது, டாக்டர்கள் இல்லை மருந்துகள் இல்லை என்ற அதிமுகவின் விமர்சனத்தை உங்கள் சாதனை திட்டம் முறியடிக்குமா? இப்போதும் கூட சவாலாக சொல்லுவேன். அடுத்த ஆண்டுக்கும் தேவையான மருத்துவர்களையும் எடுத்து வைத்துள்ள ஒரே துறை இந்தத் துறை தான். இதுவரைக்கும் மருத்துவத் துறை வரலாற்றில் இல்லாத வகையில் செய்துள்ளோம்.
ஒரு பொய்யான தகவலைத் தொடர்ந்து பரப்பிப் பணியிடங்கள் காலி என்று சொன்னார்கள். அதிமுக ஆட்சியிலிருந்து திமுக ஆட்சிக்கு வரும்போது தான் 40% காலி பணியிடங்கள் இருந்தது. இப்போ அடுத்த ஆண்டுக்கு தேவையான மருத்துவர்களையும் எடுத்து கையிருப்பில் வைத்துள்ளது இந்த ஆட்சி. யார் வேண்டுமானாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
* சைதை தொகுதியில் திமுக, அதிமுக என 15 பேர் களத்தில் இருக்கிறார்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இப்போது நான் போட்டியாக யாரையும் நான் கருதவில்லை. எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் நான் சமமானவர்களாகவே கருதுகிறேன். காரணம், எதிரில் போட்டியிடுபவர்கள் நம்மை விடக் கூடுதல் பலமானவர்கள் என்று நினைத்து களப் பணியாற்றினால் தான் சரியாக இருக்கும் என்று கருதுபவன் நான். அந்த வகையில் யார் நிற்கிறார்கள் என்பதை தாண்டி நம்மை விடப் பலமானவர் நிற்கிறார் என்கின்ற வகையிலேயே எனது பணி அமைந்துள்ளது.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நடந்திருக்கிறேன். நேற்றோடு 140 மணி நேரம் நடந்து வாக்குகளைச் சேகரித்துள்ளேன். தமிழக வரலாற்றில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நடந்து ஓட்டு கேட்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு காரணம், வாக்காளர்களைத் தனித்தனியே சந்தித்து அவருடைய கரம் பற்றி வாக்குகளைக் கேட்கும் போது அவர்களுடனான உணர்வு நம்மோடு பகிர்ந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அமோக வெற்றியை பெறுவேன்.
* எந்த மாதிரியான வெற்றி கிடைக்கும் என நம்புகிறீர்கள்?
இதுவரை நடைபெற்ற சைதை தொகுதியின் தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசம் என்பது இந்த முறை இருக்கும் என்று நான் கருதுகிறேன். இதுவரை சைதாப்பேட்டை தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 30,000 தான் அதிகபட்ச வாக்கு வித்தியாசமாக இருந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 48,000 தான் அதிகபட்ச வாக்கு வித்தியாசமாக இருந்துள்ளது. கண்டிப்பாக அதையும் கிராஸ் பண்ணுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
