விருதுநகர், ஏப். 17: விருதுநகரில் கடும் கோடை வெப்பம் அதிகரித்த நிலையில், வரத்து குறைவு காரணமாக இளநீர் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகரில் வழக்கத்தை விட தற்போது கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் கடுமையாக உள்ளது. இதனால் காலை 11 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர்.
மதிய வேளையில் பிரதான சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் உள்ள கரும்பு ஜூஸ் கடைகள், இளநீர் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று கரும்பு ஜூஸ் மற்றும் இளநீர் வாங்கி பருகி வருகின்றனர்.
